Aran Sei

‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை

credits : thandora times

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து நடந்து வரும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் தலைவரும் சட்டபேரவை உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் களியலில் தொடங்கி ஆரல்வாய் மொழி வரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கனிமவள கொள்ளை அரங்கேறி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

“குறிப்பாக, நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட லாரிகளில், கல், ஜல்லி, பாறை, செயற்கை மணல் ஆகியவை கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கனிமவளத் துறையிடம் இருந்து கேரளாவுக்கு 50 லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்வதாக அனுமதி பெற்றுவிட்டு, 600-க்கும் மேற்பட்ட லாரிகளில் கடத்திச் செல்லப்படுகிறது. அதோடு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 8 யூனிட் வரை லாரிகளில் கனிமவளம் ஏற்றி செல்லப்படுகிறது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

கனிமவளச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் படி கன்னியாகுமரியில் சிறு குன்றுகளில் கூட கற்களை உடைக்க முடியாது என்றும் ஆனால், விதிமுறைக்குப் புறம்பாக, கனிமவள கொள்ளை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையில் நடைபெற்று வருவது வேதனையானது என்றும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து அரங்கேறி வரும் கனிமவள கொள்ளையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். அனுமதி பெற்று சட்ட விரோதமாக இயங்கி வரும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை அரங்கேறிய கனிமவள கொள்ளை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி, சூற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள், பத்திரிகையாளர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.” என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்