Aran Sei

10வது ஆண்டில் நுழையும் சிரிய உள்நாட்டுப்போர் – எப்போது முடியும் இந்த ரத்தக்களறி?

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல், பத்தாவது ஆண்டில் நுழைந்துள்ளது. இது ஏற்கனவே 50லட்சம் மக்களின் உயிரைப் பறித்ததோடு, 1.10 கோடிக்கும் அதிகமானோரை இடம்பெயரச் செய்துள்ளது. இதில் பாதி பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக உள்ளனர். அவர்கள் கூடார நகரங்களில் மோசமான இருப்பிடங்களில் பன்னாட்டு நன்கொடையாளர்களின் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்து இருக்கிறார்கள். இதில் மிகப் பெரிய சோகம் என்னவென்றால், இப்போதும்கூட மோதல் முடிவிற்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், எந்த பக்கத்திலிருந்தும் அமைதிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும்தான். சிரிய மக்களின் துயரம் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. மேற்கு ஆசியாவின் விளிம்பில் உள்ள ஒரு மிகச் சிறிய நாடு இவ்வளவு வன்முறைகளையும், இவ்வளவு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போட்டியாளர்களுகிடையே  தீவிரமான போட்டியில் சிக்கி இருக்கும் போதும், பன்னாட்டு ஊடகங்களின் மிகக் குறைவான கவனத்தையே பெற்றிருக்கிறது என்பது வியப்பூட்டுகிறது.

இந்தியாவின் முன்னணி அறிவுஜீவியும், தூதருமான ராஜேந்திர அபயங்கர், சிரிய நாட்டிற்கான முன்னாள் இந்திய தூதரும், வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவைக் கையாளும் வெளியுறவு அலுவலகத்தின் செயலாளரும் ஆவார். அவர் எழுதியுள்ள ‘சிரியா: ஒரு சுழல்மைய நாட்டின் சோகம்’ என்ற நூல், சிரிய வரலாறு மற்றும் அரசியல் பற்றிய குறிப்பிடத்தக்க அளவில்  விரிவாக மற்றும் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளதுடன், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்ச்சைகளின் ஊற்றுக்கண்ணையும், போக்கையும் விளக்கியுள்ளது.

போரின் ஊற்றுக்கண்

இன்றிருக்கும் சிரியா 1924 ல் உருவாக்கப்பட்டது. பிரெஞ்சு நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த (mandate) சிரியா, பல்வேறு நம்பிக்கைகள் பிரிவுகள், இனங்களின் கலவையாகும்; அது சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லீம்கள், அலாதி மற்றும் ட்ருஸ் சமூகங்கள், பல்வேறுபட்ட  கிறித்துவ பிரிவினர்கள், குர்த், துர்கோமான் மற்றும் ஆர்மீனியன் போன்ற இனக்குழுக்கள் ஆகிய அனைவரையும் கொண்டது.

கடந்த 50 வருடங்களாக தந்தையும் மகனுமான ஹஃபீஸ் அல் ஆசாத் (1970-2000) மற்றும் பாஷர் அல் ஆசாத் ஆகிய ஷியா அலாவி பிரிவைச் சேர்ந்தவர்கள் சிரியாவை ஆண்டு வந்துள்ளனர். அவர்கள் அரபு தேசியவாத தன்மையும், சோசலிசத்தையும் கலவையாகக் கொண்ட ‘பாத்’ (Ba’ath) என்ற கட்சியின் கீழ், மதச்சார்பற்ற ஒழுங்கை பேணி வந்தனர். மக்கள் தொகையின் வெவ்வேறு பிரிவினரின் ஒத்துழைப்புடன் ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தனர்‌. சிரியாவை ஒரு “பன்முக அரசு’ என்று கூறும் அபயங்கர், பாஷர் அல் ஆசாத் “சிரிய சமூகங்களின் முக்கிய கூறுகளின்” ஆதரவை பெற்றிருக்கிறார் என்கிறார். சிரியாவின் அரசியல் கலாச்சாரம், மேற்கு நாடுகளுடன் ஆழ்ந்த விரோதம், தேசியவாதத்திற்கான தீவிர முறையீட்டின் அடிப்படையில், தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுவதற்காக விருப்பம் மற்றும் நெருக்கடி உணர்வை தொடர்ந்து வளர்ப்பது, அதாவது 1963 முதல் 2011 வரையிலான ஒரு “அவசர கால நிலை” ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஒழுங்கில் எதிர் கருத்துக்களுக்கு இடமில்லை: 1982 ஆம் ஆண்டு, ஹஃபீஸ் அல் ஆசாத், ஹமா நகரை அழித்து முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பினரிடமிருந்து வந்த அச்சுறுத்தலை அழித்தொழிக்க பல ஆயிரக்கணக்கானவர்களை கொன்றார்.

இன்றைய பிரபலமான அதிருப்தியின் ஆதாரங்களுக்கு ஒரு ஆர்வமூட்டும் சொல்லை அபயங்கர் தருகிறார்: “சூழல்-குறுங்குழுவாதம். இந்த நிகழ்வு துண்டு துண்டான மற்றும் சமத்துவமற்ற சமூகங்களில், குறுங்குழுவாத வன்முறைக்கும், சுற்று சூழல் அழுத்தங்களுக்கும் இடையிலான உறவை தேசிய கனவின் பலவீனமான உணர்வோடு, தேசத்தைப் கட்டி எழுப்பும் திட்டங்களை விளக்குகிறது”. என்று அவர் கூறுகிறார். சிரியா தனது நீர்வளங்களை மோசமாக பயன்படுத்துகிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். அதன் பெருமளவிலான  நீர்ப்பாசன திட்டங்கள் அதன் நிலத்தடி நீரை குறைத்தன. அதனால் 2006-2010 வறட்சி மனிதாபிமானமற்ற  பேரழிவிற்கு வழிவகுத்தது. “சுற்றுசூழல் அகதிகளாக” ஆயிரக்கணக்கான விவசாயிகள் நகரத்தை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். நெருக்கடியை மோசமாக கையாண்டது, ஏழைகளிலும் ஏழைகளான சன்னி பிரிவினரிடையே பலிகடா ஆக்கப்பட்டதாக எழுந்த உணர்வே மனக்கசப்பிற்கு காரணமானது என அவர் குறிப்பிடுகிறார். மேலும் அவர்,” மோசமான சுற்றுச்சூழல் நிலைமைகளும், திறமையான அரசு நிர்வாகம் இல்லாத நிலையும், வகுப்புவாத  நல்லிணக்கத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தெளிவாகிறது.” என்று கூறுகிறார். ஆழ்ந்த அதிருப்தியில் இந்த குழப்பத்திலிருந்துதான் தற்போதைய மோதல் பிறந்தது.

2011, மார்ச் மாதத்தில், அரபு வசந்த எழுச்சிகள் வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் பரவின. சில இளைஞர்கள் தாராவில் ஒரு உயர்நிலைப் பள்ளி சுவரில் ஆசாதின் உருவ பொம்மையை வரைந்தனர்‌. அவர்கள் பல வாரங்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர். இது மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்து, அது பல சிரிய நகரங்களுக்கும் பரவியது.

தனது சொந்த வழிகளைப் பயன்படுத்தி ஆசாத் இந்த நெருக்கடியை வெற்றிகரமாக கையாண்டிருக்கலாம்; ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அண்டை நாடுகளான துருக்கி, கத்தார், சவூதி அரேபியா ஆகியவை ஆசாத்தை தூக்கி எறிந்து டமாஸ்கஸில் சன்னி பிரிவைச் சேர்ந்தவரை அமர்த்த களத்தில் இறங்கின. அவர்கள் பல்வேறு  இஸ்லாமிய போராளிக் குழுக்களை (ஒரு சமயம் அவர்களது எண்ணிக்கை 1500க்கும் அதிகமாக இருந்தது) ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் நிதி ஆகியவற்றுடன் ஆதரித்தனர். இத்தகைய தீங்கற்ற (innocuous) தோற்றங்களிலிருந்து  உருவானது சிரிய மோதல். ஆனால் இன்று இந்த மிருகத்தனமான புதைகுழியில் தங்கள் நலனை பிடுங்கிக் கொள்ள பலரும் நடனமாடும் அரங்கமாகிவிட்டது.

மோதலில் உள்ளவர்கள்

சமகால சிரிய கதையை  அபபயங்கர் கூறும்போது அதை “சுழல் மைய நாடு” (pivotal state) என்று அழுத்தமாக கூறுகிறார். யார் அதன் ஆட்சியைப் பிடித்தாலும் வெளிநாடுகளின் ஆதிக்கத்தில்தான் கண்டிப்பாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசியாவின் விளிம்பில் உள்ள சிரியா, ஆப்பிரிக்காவிற்கான  “பாலமாக” இருப்பதால் அது, சிரியாவிற்கு ஒரு நில தந்திர முக்கியத்துவத்தை (geo- strategic) அளிக்கிறது. “சிரியாவை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, பல (துணை) கண்டங்களுக்கு இடையிலான மக்கள், பொருள் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அரசியல் வாய்ப்பைத் தருவதாக இருக்கும்.” என்கிறார் ஆசிரியர்.  குறிப்பாக, மேற்காசிய போட்டிகளின் பின்னணியில் பார்க்கும் போது, சிரியா ஐந்து நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதனால் இவ்வாறு, இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையில் ஆழமாக உள்பொதிந்திருப்பது போலவே,  குர்த் இனத்தவர், சுதந்திர தாய் நாட்டிற்கான ஆவலுடன் இருப்பதுடன், தங்கள் மக்கள் வாழும் ஈரான், ஈராக் மற்றும் துருக்கி ஆகியவற்றுடன் எல்லை தாண்டிய மோதல்களை நடத்துபவர்களாக உள்ளனர். சிரியாவின்பல்வேறு இன மற்றும் பிரிவுகளின் கலவையும் கூட, சவூதி அரேபியா, ஈரானுடன் ஆழமான குறுங்குழுவாத பிளவிற்கு ஒரு பகுதியாகவும், லெபனான், ஏமன், ஈராக் ஆகிய நாடுகளில் இந்த மோதலின் எதிரொலிகளின்  ஒரு பகுதியாகவும் இருக்கிறது.

சிரியாவின் ‘சுழல் மையத்’  தன்மை ரஷ்யா, அமெரிக்கா போன்ற கூடுதல் போட்டியாளர்களை இழுத்துள்ளது. இவர்கள் இருக்கும் உலக அமைப்பை பாதுகாக்கவோ (ரஷ்யா) அல்லது முற்றிலும் மாற்றி அமைக்கவோ (அமெரிக்கா) உலக அரங்கில் போரிடுபவர்கள். இவர்கள் சிரியாவை தங்களின் பெரும் போரின் ஒரு போர்க்களமாக மாற்றி உள்ளனர்.

சிரியாவின் மோதல்களும், அரசின் நிர்வாக முறிவும் தீவிரவாத கூறுகளுக்கு தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளவும், களத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் உகந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

இஸ்லாமிய ஈராக்அரசு (ISI) 2012 ஆம் ஆண்டின் துவக்கத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவிற்கு ஒரு படைப் பிரிவை அனுப்பியது. அது ஆண்டின் இறுதிக்குள் சிறந்த கிளர்ச்சி போர் படையாக மாறியது‌.

அதன் சிரிய கிளை அல்கொய்தாவுடன் தனது தொடர்பை அறிவித்தது. 2013 ல் ஈராக்- சிரிய இஸ்லாமிய அரசு (ISIS) தோன்றியது. சிரிய-ஈராக் எல்லையில் தெளிவற்ற பகுதியில் இங்கிலாந்தின் பரப்புக்குச் சமமான நிலப்பரப்பைக் கொண்ட, 90லட்சம் மக்கள் தொகை கொண்ட, ஒரு லட்சம் போராளிகளை உடைய இராணுவத்தைக் கொண்ட, பல கோடிக்கணக்கான ரூபாய் மாத வருமானமுள்ள,  நாடுகடந்த முன்மாதிரி நாடாக இது தன்னை அறிவித்துக் கொண்டது.  போட்டியிடும் ஆர்வம், ஆட்சி மாற்றத் திட்டம், ஐஎஸ்ஐஎஸ் மீதான போர் ஆகியவை சிரியாவில் ஒன்றிணைந்தன. அமெரிக்காவின் தலைமையிலான ஐஎஸ்ஐஎஸ் – க்கு எதிரான பன்னாட்டு கூட்டணி,  சிரிய – துருக்கி எல்லையில் தங்கள் ‘ரஜோவா’ – வை (மேற்கத்திய தாய்நாடு) உருவாக்கும் நம்பிக்கையில் இருக்கும் சிரிய குர்த் இனத்தவரை ஆதரித்தது. குர்துகளின் ஒருங்கிணைந்த எதிர்ப்பு சக்தியாக அமெரிக்கா  கட்டியெழுப்பிய சிரிய ஜனநாயகப் படைகள்தான் சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் காலிபாவை 2018 ல் அழித்தது. அதன் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதியை, 2019 அக்டோபரில் கொன்றது‌.

ஆசாத் ஆட்சி ஆரம்பத்தில் இருந்தே அதன் நீண்டகால போர்தந்திர நண்பனான ஈரானின் ஆதரவை அனுபவித்து வருகிறது. இது உள்நாட்டில் அனுபவித்து வரும் கடுமையான தடைகளையும் மீறி, தனது சார்பாக ஆட்களையும்,ஆயுதங்களையும், நிதியையும் திரட்டி வருகிறது. ரஷ்யா, அரசியல், போர்தந்திர காரணமாக ஆசாத்திற்கு ஆதரவாக இந்த மோதலில் நுழைந்தது: அது வெளி ஆதரவுடன் நடக்கும் ஆட்சி மாற்றத்தை முற்றிலும் எதிர்க்கிறது. அத்துடன் உலகப் போட்டியில் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வதற்காக, மத்திய தரைக்கடல் கடற்கரையோரம் தனது  விரிவான நலன் என்ற போர்வையில், சிரியாவில் உள்ள தனது இராணுவ தளங்களை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது.

ரஷ்யா மற்றும் ஈரானின் ஆதரவால் போரின் அலை திரும்பி, ஆசாத் இப்போது சிரியாவின் பெரும்பாலான பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதுடன், பதவி நீக்கம் என்ற பிரச்சினை, நிகழ்ச்சி நிரலில் இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளது.

எல்லையில் குர்துகள் பெற்றுவரும் வெற்றிகள், துருக்கிக்கு ஒரு ‘இருத்தலியல்’ அச்சுறுத்தலைக் கொடுத்து வருகிறது. ஒரு மிகப் பெரும் தலைகீழ் மாற்றமாக, துருக்கி, இஸ்லாமிய கூட்டணியையும், ஆட்சி மாற்றத் திட்டத்தையும் கைவிட்டு விட்டு, ஆஸ்தானா அமைதி ஏற்பாட்டில் ரஷ்யா மற்றும் ஈரானுடன் சேர்ந்து கொண்டது. இது பெரும்பாலான முனைகளில் போர்நிறுத்தத்தைக் கொண்டு வந்தது.  வடக்கு இத்லிப் மட்டுமே இதற்கு விதிவிலக்காக உள்ளது. அங்கு துருக்கி, இஸ்லாமிய போராளிகளைத் தன்பக்கம் சேர்த்துக்கொள்ள முயன்று வருவதுடன், வடகிழக்கில் குர்துக்களுடனான தனது மோதலை  அவர்கள் ஆதரிக்கச் செய்யப் பயன்படுத்துகிறது. 30 லட்சம் மக்கள் தொகையையும், 50,000 போராளிகளையும் வைத்துள்ள இத்லிப், ஒரு முக்கிய புள்ளியாக உள்ளது. ஏனெனில் ரஷ்யாவும் சிரியாவும் இந்த கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி கோட்டையை விடுவிப்பதற்கான தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர்.

அமெரிக்காவின் நிலைப்பாடு பல்வேறு நெளிவு சுளிவுகளுடன் குழப்பமாகவே உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தோற்கடிக்கப்பட்ட உடன், தனது வீரர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள ஆர்வமாக இருந்தார் ட்ரம்ப். அவர் தனது குர்திஷ் பங்காளிகளை கைகழுவி விட்டு துருக்கிப் படைகளை அழைத்து, வடகிழக்கில் தனது இருப்பைக் குறைத்துக்கொள்ள விரும்பினார். மறுபுறம் அவரது அதிகாரிகள் போர்தந்திர காரணத்திற்காக ரஷ்யாவையும், ஈரானையும் எதிர்கொள்ள அங்கு அமெரிக்கப்படைகளின் இருப்பு தேவை என்கின்றனர். தனது எண்ணெய் வயல்களின் பாதுகாப்பிற்காக, 500 போர் வீரர்களை மட்டும் அங்கு நிறுத்திக்கொள்ள ட்ரம்ப்பும் அதிகாரிகளும் செய்து கொண்ட ஏற்பாடு,  மற்ற அனைவரையும் திருப்தி அடையச் செய்யவில்லை என்பதே நிலையாகும்.

மற்றொரு மாற்றம் வளைகுடா அரபு நாடுகளிடமிருந்து வந்தது: ஆரம்பத்தில் ஆசாத்திற்கு எதிராகவும், ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாகவும் இருந்த அவர்கள் இப்போது, சிரிய விவகாரத்தில் ஈரானை மட்டுமே நடுவராக எதிர்கொள்ள, சிரிய ஆட்சியுடன் உறவை வளர்த்துக் கொள்ள முயன்று வருகின்றனர்.

ஒரு பார்வை

பத்தாண்டுகளுக்குப் பிறகு சிரிய மோதல் முடியும் தருவாயை அடைந்துள்ளது. ஆனால் சண்டைகள் குறைந்து விட்டாலும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன: இத்லிப்பின் தலைவிதி மற்றும் குர்திஷ் ஆசைகள்‌. மீண்டும், இறையாண்மை கொண்ட சிரியாவை அடைய, வட சிரியா மோதல்களில் ஆசாத், ஈரான், ரஷ்யா ஆகியவற்றின்  நலனுக்காக தனது நீண்ட கால இருப்புக்கான துருக்கியின் விருப்பம். இடம் பெயர்ந்தவர்கள் திரும்புதல் மற்றும் மறு கட்டமைப்புத் தொடர்பான அவசர விவகாரங்கள்: புவிசார் அரசியல் போட்டிகள் தீர்க்கப்படாத நிலையில்  மறுகட்டமைப்பிற்கு பல கோடி டாலர்கள் தேவைப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சிரிய அரசியல் ஒழுங்கின் எதிர்கால வடிவத்தைக் தீர்மானிக்கும் ஒரு அரசியல் நடைமுறையை உருவாக்க வேண்டிய சர்ச்சைக்குரிய விஷயம் உள்ளது – அதன் நில ஒருமைப்பாட்டிற்கான புதிய அரசியல் அமைப்பை வடிவமைப்பது, பல்வேறு சமூகங்களுக்கும் இடமளிப்பது, ஜனநாயக, கூட்டாட்சி நிறுவனங்கள்- இவை அத்தனையையும்,  கடந்த ஐம்பது ஆண்டுகளாக எதேச்சாதிகார ஆட்சியையே கண்ட ஒரு நிலத்தில், அழிவைத் தரும் மோதல்களையே கடந்த பத்தாண்டுகளாக அனுபவித்து வரும் நிலத்தில் செய்ய வேண்டி உள்ளது.

தனது நீண்டகால தூதரக அனுபவத்தில் அபயங்கர், அரசியல் நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பல அணுகுமுறைகளைக் கொடுத்துள்ளார். இதற்கு ஐ.நாவின் தீவிர ஈடுபாடும், இதுவரை இந்த சுழல் மைய நாட்டில் மோதல்களை ஊக்குவித்து தங்களது நலன்களுக்கு சேவை செய்வதற்காகவே அதனை பயன்படுத்தி வந்த பல்வேறு நாடுகளின் ஆதரவும் வேண்டும். இதுவரை அவர்களிடமிருந்து அமைதிக்கான எந்த ஆர்வமும் இருந்ததாக சான்றுகள் இல்லை; சிரியாவில் போட்டிகள் தொடரும், அவ்வப்போது அது ஆபத்தானதாகக் கூட மாறக்கூடும். இந்த புத்தகம் அவரது தூதரக அனுபவங்களுக்கு அப்பாலும் சென்றுள்ளது‌. அது கடந்த பத்தாண்டுகளுக்கிடையே பலமுறை சிரியாவுக்குச் சென்று வந்ததையும் – பழைய மோதல்கள், அண்டை நாடுகளில் உள்ள சிரிய அகதிகளுடனான நேர்காணல்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி உள்ளது. இந்த நேரடி அனுபவங்கள் போதுமான ஆராய்ச்சிகளின் ஆதரவுடன் உள்ளது. இது, இந்த புத்தகம் பொதுவாக சிரியா மற்றும் மேற்காசியாவைப் பற்றிய உலக நாடுகளின் கருத்துக்களுக்கு ஒரு மாபெரும் பங்களிப்பாகவும், வரும் ஆண்டுகளில் ஒரு மதிப்புமிக்க ஆதார குறிப்புகளின் ஊற்றாகவும் இருக்கும்.

(www.thewire.in இணையதளத்தில் தல்மீஸ் அகமது எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்