எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ பிணையை, மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு, பிப்பிரவரி மாதம், 82 வயதான வர வர ராவுக்கு உடல்நலக் காரணங்களுக்காக மும்பை உயர் நீதிமன்றம் ஆறு மாத காலத்திற்கு முதல் பிணையை வழங்கியது. மும்பையை விட்டு அவர் வெளியேற கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
பின்னர் அப்பிணையை நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்த வரவர ராவ், உடல்நலக்குறைவு காரணமாக நிரந்தர பிணை வழங்க கோரி மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, அவருக்கான பிணையை நீதிமன்றம் பலமுறை நீட்டித்தது.
நேற்று (பிப்பிரவரி 26), நீதிபதிகள் எஸ்.பி.ஷுக்ரே மற்றும் ஏ.எம்.போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பிணையை நீட்டிக்கக் கோரிய வர வர ராவின் புதிய மனுவை அவரது வழக்கறிஞர்கள் சமர்பித்துள்ளனர்.
“என்னுடைய மருத்துவ அறிக்கைகளின்படி, எனக்கு அறிகுறியற்ற பார்கின்சன் நோய், நரம்பியல் கோளாறுகள் இருக்கின்றன. தொப்புள் குடலிறக்கத்தைக் குறிக்கும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுகிறேன்” என்று வரவர ராவ் தனது புதிய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
‘கவிஞர்களால் சிறையை நிரப்பாதீர்கள்’ – வரவர ராவ் விடுதலைக்கு இஸ்ரேலிய கவிஞர்களின் குரல்
மேலும், மும்பையை விட்டு வெளியேற கூடாது என்ற பிணை நிபந்தனையை மாற்ற வேண்டும் என்றும் தனது சொந்த மாநிலமான தெலுங்கானாவுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மனுவை மார்ச் 1ஆம் தேதி விசாரிப்பதாகக் கூறியுள்ள மும்பை உயர் நீதிமன்றம், பிணை காலத்தை மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.