ஒன்றிய அரசை கேள்வி கேட்டால் கேட்பவருக்கு தேசவிரோதி, அர்பன் நக்ஸல் என்று ஒன்றிய அரசு முத்திரை குத்துகிறது என்று தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ஒன்றிய அரசை எதிர்த்து ஏதேனும் கேள்விகேட்டால், அவர்கள் மீது தேசவிரோதி, அர்பன் நக்ஸல் என முத்திரையை குத்திவிடுகிறது ஒன்றிய அரசு. கேள்வி கேட்பவருக்கு எதிராக எப்போதும் தன்னுடைய முத்திரையைத் தயாராக வைத்துள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி போன்றோர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசினார். அப்படியென்றால் இவர்கள் இருவரும் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். “இந்திய எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிக்க முயல்கிறது என நான் தெரிவித்தேன். என்னை பாஜகவினர் தேசவிரோதி என முத்திரைகுத்துவீர்களா, நம்முடைய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கிறது என்று ஒருவர் கூறினாலே அவர் தேசதுரோகியா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானாவில் நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும், கொள்முதல் செய்ய முடியுமா அல்லது முடியாத என்ற பதிலையும் ஒன்றிய அரசிடம் இருந்து பாஜகதலைவர்கள் பெற்றுத்தரவேண்டும். தெலங்கானா விவாசயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யாதவரை ஒன்றிய அரசையும், பாஜகவினரையும் விடமாட்டோம் என்றும் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் எச்சரித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் காலூன்றுவதற்கான ஒரு வாய்ப்பாக பாஜக கருதுகிறது, மேலும் பல விஷயங்களில் முதலமைச்சரை நேரடியாகத் தாக்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசை விமர்சித்துப் பேசுவோரை செயல்படுவோரை மிரட்ட வருமானவரித்துறையையும் அமலாக்கப்பிரிவையும் ஒன்றிய அரசு பயன்படுத்தி வழக்குத் தொடர்கிறது.
பிறரை மிரட்டியது போல் என்னை மிரட்டிப்பார்க்க முடியாது. நாங்கள் நேர்மையானவர்கள். தேவையில்லாத முயற்சிகளில் பாஜகவினர் ஈடுபடவேண்டாம்.
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால், ஆண்டுக்கு ஒரு கோடிபேர் வேலையிழந்து வருகிறார்கள். நாட்டிலேயே குறைவாக வேலையின்மை இருக்கும் மாநிலம் தெலங்கானாதான் என்று தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.