Aran Sei

‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தாருங்கள்’ – ஸ்டாலின் உள்ளிட்ட 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தாருங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தேசிய அளவிலான 33 தலைவர்களுக்குப் பீகாரின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

முன்னதாக, நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பீகாரின் அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில், பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.

தேஜஸ்வி யாதவ் எழுதியிருக்கும் கடிதத்தில், “சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான கோரிக்கை தேசத்தைக் கட்டமைப்பதில் ஒரு முக்கியமான கோரிக்கை. சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு முறை நடத்திவிட்டால்  இந்தியா போன்ற நாட்டில்  கவனிக்க வேண்டிய  அழுத்தமான கவலைகளுக்கு விடை கிடைக்கும். இந்த நாட்டை மேலும் நியாயமானதாகவும், சமத்துவமாகவும் மாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை உறுதி செய்வதற்கு கிடைத்த ஒரு வரலாற்று வாய்ப்பு” என தேஸ்வி யாதவ் அவரது கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி, ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

”நமது நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியின் முன்னுரிமைகளை அமைக்க முக்கிய தேவையான இந்தக் கோரிக்கை நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் அளிப்பதில் நீங்கள் என்னுடன் கைக்கோர்ப்பீர்கள் என நம்புகிறேன். உங்களிடமிருந்து  ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். இது தொடர்பான செயல் திட்டத்தைத் தாமதமின்றி உடனடியாக தயாரிக்க இருக்கிறோம்” என பீகாரின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்