Aran Sei

என்று தணியும் இந்த வேள்வித் தீ – விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உயிர் துறந்த ஆசிரியர்

Image Credit : thewire.in

விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி, ஆசிரியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹரியானா ரோஹ்தக் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் முகேஷ், தற்கொலைக்கு சற்று முன் சமூக வலைதளங்களில் பதிவேற்றிய காணொளியில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு தான் எப்போதும் ஆதரவாய் இருப்பதாய் தெரிவித்துள்ளார்.

“தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள்” – பாஜக அமைச்சர்

ரோஹ்தக் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் கோரக்பால், “நடுத்தர வயதை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்யவிருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் காணொளியை வெளியிட்டிருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தவுடன், உடனடியாக அவரின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தோம். கெடுவாய்ப்பாக, நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, ​​அவர் விஷம் உண்டு விழுந்துக்கிடந்தார். நாங்கள் அவரை பிஜிஐஎம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். பின் ஆசிரியரின் உடலை அவரின் உறவினர்களிடத்தில் ஒப்படைத்தோம்.” என்று கூறியுள்ளார்.

ஆசிரியர் முகேஷ் வெளியிட்ட காணொளியில், தான் போராடும் விவசாயிகளுடன் நின்றதாகவும், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வருத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தால் மனமுடைந்து சென்னையில் ஒருவர் தற்கொலை – விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று கடிதம்

மேலும், போராடும் விவசாயிகளுக்குத் துணை நின்றதற்காக ஹரியானாவை சேர்ந்த சில அரசியல்வாதிகள் உட்பட அனைவருக்கும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், ஹரியானாவின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த 52 வயதான கரம்வீர் சிங், திக்ரி எல்லையிலிருந்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதே திக்ரி எல்லையில், இருவாரங்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

‘என் கடைசி ஆசையாக விவசாய சட்டங்களை நீக்குங்கள்’ – தற்கொலைக்கு முன் விவசாயியின் உருக்கமான கடிதம்

டிசம்பர் மாதம் பஞ்சாப்பை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் விஷம் குடித்து இறந்தார். முன்னதாகச் சீக்கிய மத போதகரான சாந்த் ராம் சிங், சிங்கு எல்லைப்பகுதியில், ”விவசாயிகள் வலியைத் தாங்க முடியவில்லை” என்று கூறி தற்கொலை செய்துகொண்டார் என்பது நினைவுகூறத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்