Aran Sei

எதிர்ப்பிற்கு அஞ்சிய டாடா : மொழியியலாளர் நோம் சோம்ஸ்கி நிகழ்வு ரத்து

Image Credits: The New York Times

டாடாவின் இலக்கிய விழாவில் (Tata Literature Live festival), சமூக செயற்பாட்டாளரும் மொழியியலாளருமான நோம் சோம்ஸ்கி மற்றும் பத்திரிகையாளர் விஜய் பிரஷாத் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவிருந்தனர். இந்த நிகழ்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர்களை குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் ‘தணிக்கை’ நடவடிக்கையில் ஈடுபட்டு தங்களை ஒதுக்கிவைத்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். ‘அழிவு, சர்வதேசவாதம் மற்றும் மனித கதையின் இருண்ட பகுதியை’ பற்றி ஒரு உரையாடலை நடத்த விரும்பியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வு நேற்று இரவு (நவம்பர் 21) 9 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டது. இதில், நோம் சோம்ஸ்கியின் புதிய புத்தகமான ‘சர்வதேசியம் அல்லது அழிவு’ (Internationalism or Extinction) குறித்து விவாதிக்கப்படவிருந்தது. இருப்பினும், இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சோம்ஸ்கி மற்றும் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “அவர்கள் ஒரு மின்னஞ்சலைப் பெற்றுள்ளனர். அதில், ‘எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக, உங்கள் உரையாடலை ரத்து செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தெரிவிக்க நான் வருந்துகிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

“டாடா மற்றும் திரு.அனில் தர்கர் (விழாவின் இயக்குனர்) எங்கள் அமர்வை ரத்து செய்ய ஏன் முடிவு செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே ஊகத்தின் அடிப்படையில் நாங்கள் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறோம்: இது ஒரு தணிக்கை நடவடிக்கையா?” என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக, பல சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஒருங்கிணைந்து நோம் சோம்ஸ்கிக்கு ஒரு கடிதம் எழுதினர் என்று ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அவர்கள் “மக்களை கட்டாய இடம்பெயர்வுக்குத் தள்ளுவது, மனித உரிமை மீறல் மற்றும் சுற்றுச்சூழல் கொள்ளை ஆகியவற்றில் டாடா குழுமம், பெரும் பங்கைக் கொண்டுள்ளதாக” குற்றம் சாட்டினார். எனவே டாடா குழுமம் ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்வைப் புறக்கணிக்குமாறு சோம்ஸ்கியிடம் வலியுறுத்தினர்.

அதையடுத்து, நவம்பர் 20-ம் தேதி (நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முந்தய நாள்), “டாடா மற்றும் டாடாவை போன்ற நிறுவனங்களைப் பற்றிய எங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு அறிக்கையைப் படிப்போம். அறிக்கையை நிகழ்வின் ஆரம்பத்திலேயே படித்துக் காண்பிப்போம்” என்று நோம் சோம்ஸ்கியும் விஜய் பிரசாத்தும் அறிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்வை ரத்து செய்துள்ளனர்.

நோம் சோம்ஸ்கி அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் கார்ப்பரேட் நலன்களை நீண்டகாலமாக வெளிப்படையாக விமர்சிக்கும் ஒருவர் என்று ‘தி வயர்’ குறிப்பிட்டுள்ளது. விஜய் பிரசாத் ட்ரைகோன்டினன்டல்: சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்