Aran Sei

`பொய்யான அறிக்கை வெளிட்ட ஸ்டாலின் மீது வழக்கு’ – அமைச்சர் விஜய பாஸ்கர்

மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தொடர்பாக பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அக்டோபர் 31ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமைச்சர் துரைக்கண்ணு மரணம் – தலைவர்கள் அஞ்சலி

நவம்பர் 7 தேதி இரவு, அமைச்சர் துரைக்கண்ணுக்கு மிகவும் நெருக்கமான கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகனைத் திடீரெனக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைதுக்கான காரணம் தெரிவிக்கக் காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

இந்தக் கைதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (நவம்பர் 9) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் முருகனின் கைது குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“துரைக்கண்ணு உயிருக்குப் போராடியபோது அ.தி.மு.கவின் தலைமை பல நூறு கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது. பணத்திற்கு உத்தரவாதம் கிடைத்த பிறகே மரண அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.” என்று அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

‘அமைச்சர் துரைக்கண்ணுவின் மரண அறிவிப்பில் மர்மம்’ – ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்களின் ஆட்சியில், ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் என்பதைப் புறக்கணிக்க முடியவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (நவம்பர் 10) வெளியிட்டுளள அறிக்கையில் “அதிமுக ஆட்சியில் எந்த ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அமைச்சரின் இறப்பு குறித்து பொய்யான அறிக்கைகள் வெளியிட்டு, மலிவான அரசியலைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்” என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் 12 ஆம் தேதி, மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் சு.துரைக்கண்ணு கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருடைய குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்கவும், அவரது நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் ஆகியவற்றுக்காக ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அடுத்த நாள் (அக்டோபர் 13) அதிகாலை அனுமதிக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அன்று முதல் அவருக்கு உரிய உயர் சிகிச்சைகள், காவேரி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் குழுவினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது என்று கூறியுள்ள அமைச்சர், “நானும், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளரும், காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினருடன் இணைந்து பணியாற்றிட அமைக்கப்பட்ட, சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் ஒரு சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவும், அமைச்சரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.” என்று தெரிவித்துள்ளார்.

”25.10.2020 அன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால், அவருடைய இருதயத் துடிப்பு சீர் செய்யப்பட்டு தொடர்ந்து ‘எக்மோ’ மூலம் அவருடைய இருதயம் இயக்கப்பட்டது. இதனால், 26.10.2020 மற்றும் 27.10.2020 ஆகிய இரண்டு தினங்களில் அமைச்சரது கண் இமைகள் மற்றும் கை, கால்களில் அசைவும் இருந்ததை மருத்துவக் குழுவினர் கண்டறிந்தனர்.” என்று விஜயாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைச்சருக்குப் பல்வேறு உயர்தர தொடர் சிகிச்சைகள் மருத்துவ வல்லுநர் குழுவினரால் பல்வேறு நிலைகளில் அளிக்கப்பட்டு வந்த போதிலும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்காமல், கடந்த மாதம் 31 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு உயிரிழந்ததை விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

”எதிர்க்கட்சித் தலைவர் தந்த பொய்யான அறிக்கையின் மீது என்னுடைய விளக்கத்தினையும், அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளையும் நான் எடுத்துக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். ‘தமிழக அரசுக்கு ஒவ்வொரு உயிரும் முக்கியம்’ என்ற முதல்வரின் உயரிய நோக்கத்தின் அடிப்படையில்தான் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றோம். திமுகவை சேர்ந்த சட்டபேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சையில் இருந்தபோது, உயரிய மருந்துகள் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, உடனடியாக அவருக்குத் தமிழக அரசு தேவையான மருந்துகளை அளித்தது.” என்று மேற்கோள் காட்டியுள்ளார்.

ஸ்டாலினுடைய இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் மறைந்த அமைச்சரின் இறப்பின் மீது பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்