Aran Sei

`பாஜகவின் வரலாறே வன்முறை வரலாறுதான்’ – வேல்முருகன் காட்டம்

credits : thandora times

றுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டிக் கவசத்தைக் கொச்சைப்படுத்தியதாகக் கூறி பாஜக தலைவர் எல்.முருகன் தமிழகம் முழுவதும் வேல் பூஜையை நடத்தினார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி வரையில் “வெற்றிவேல் யாத்திரையை” தொடங்க இருப்பதாக எல்.முருகன் அறிவித்துள்ளார். அந்த யாத்திரை திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் நிறைவு பெரும் எனத் தெரிவித்துள்ளார்.

முருகனின் ஆறுபடை வீடுகளையும் தொட்டுச்செல்லும் இந்த யாத்திரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் எனக் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இந்நிலையில் நவம்பர் 6-ம் தேதி‌ முதல் தொடங்க‌வுள்ள ஆறுபடை வீடு வெற்றிவேல் யாத்திரை வெற்றி பெறவேண்டி கமலாலயத்தில் நடைபெற்ற “காப்புக் கட்டுதல்” நிகழ்வும் பாஜக தலைவர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. வேல் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜகவின் முன்னணித் தலைவர்களும் இதில் கலந்துகொள்ள உள்ளனர் எனச் செய்தியாளர் சந்திப்பில் எல்.முருகன் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேல் யாத்திரையைத் தடை செய்யக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

தமிழுக்கும் தமிழ்க் கடவுள் முருகனுக்கும் சம்பந்தமே இல்லாத தமிழை, தமிழ்நாட்டை, தமிழ்ப் பண்பாட்டையே அழிக்க முனைந்துள்ள பாஜகவினர் நவம்பர் 6 ஆம் தேதியன்று வேல் யாத்திரை நடத்தப் போகிறார்கள் என்றால் அது மிகக் கொடிய உள்நோக்கமன்றி வேறென்ன?

எனவே பாஜகவினரின் இந்த வேல் யாத்திரையைத் தடை செய்யும்படி தமிழக அரசை எச்சரிக்கை செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கொரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது இது போன்ற அரசியல் ஊர்வலம் நடத்தினால், தமிழ்நாடு அரசின் மிகக் கண்டிப்பான உத்தரவான சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாமல் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைய வழிவகுக்கும் என வேல்முருகன் கூறியுள்ளார்.

பாஜகவினரின் அந்தப் பேரணியில் அஇஅதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் உருவப் படத்துடன் கூடிய பேனர் மற்றும் பதாகைகள் எடுத்துச் செல்லப்படும். இத்தகைய அநாகரிக, வக்கிரச் செயல் எம்ஜிஆர் விசுவாசிகளுக்கும் அஇஅதிமுக தொண்டர்களுக்கும் கொதிப்பை உருவாக்கக் கூடும்; அதன் காரணமாகக் கலவரமும் நடக்கக் கூடும்.

சொல்லப்போனால், இப்படிக் கலவரம் நடக்க வேண்டும் எனத் திட்டமிட்டே பாஜக இத்தகைய பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கக் கூடும் என்றே மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “யாத்திரை புகழ் பாஜக முன்பு நடத்திய ரத யாத்திரையால் நாட்டில் ரத்தக் களரியே ஏற்பட்டதைத் தமிழக அரசு நினைவுகூர வேண்டும். தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்-பாஜக இன்றுவரை நடத்திவரும் வன்முறைச் செயல்களையும் தமிழக அரசு உணர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் வேல்முருகன்.

தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு அவர்களே குண்டு வைத்துவிட்டுத் திசைதிருப்பினார்கள். திருப்பூரில் சொந்தக் கட்சிக்காரரின் தற்கொலையை அரசியல் மற்றும் மத அடிப்படையிலான கொலை என்று விளம்பரம் செய்தது பாஜக. ராமநாதபுரத்தில் தனி நபர்களுக்கு இடையிலான மோதலை மதமோதலாகச் சித்தரித்து வன்முறையைத் தூண்ட முயன்றது பாஜக. பாஜக நிர்வாகிகள் தங்கள் வீட்டில் தாங்களே குண்டு வீசிவிட்டுச் சிறுபான்மை மக்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிய கதையும் உண்டு.

பாஜகவின் வரலாறே வன்முறை வரலாறுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை .

எனவேதான் சொல்லுகிறோம்: தமிழுக்கும் தமிழ்க் கடவுள் முருகனுக்கும் சம்பந்தமே இல்லாத, தமிழ்க் கடவுள் முருகன் பெயரையே வைத்துக் கொள்ளாத, தமிழை, தமிழ்நாட்டை, தமிழ்ப் பண்பாட்டையே அழிக்க முனைந்துள்ள, மதவெறி ஆதிக்கம் செலுத்தும் பாஜகவினர், நவம்பர்  6 ஆம் தேதி வேல் யாத்திரை நடத்தப் போகிறார்கள் என்றால், அது மிகக் கொடிய உள்நோக்கமன்றி வேறென்ன?

எனவே பாஜகவினரின் இந்த வேல் யாத்திரையைத் தடை செய்யும்படி தமிழக அரசைக் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது!

இவ்வாறு வேல்முருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வெற்றிவேல் யாத்திரைக்குத் தடை கோரி சிபிஐ(எம்) பாலகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஏற்கனவே அறிக்கை விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்