Aran Sei

பொழிலன் கைது – ‘இந்தியா நாடல்ல; மாநிலங்களுக்கு தனி கொடி வேண்டும் ’ : வைகோ

த்திய, மாநில அரசுகள் தங்கள் அடக்குமுறையை கைவிட வேண்டும் என்றும், பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ம் தேதியை  தமிழ்நாடு நாளாக கடைபிடிக்க, தமிழ்நாடு அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆணை பிறப்பித்தது.

தமிழ்நாடு நாள் : மாநிலத்தின் இறையாண்மையைக் காப்போம் – தோழர் தியாகுவின் சிறப்புக் கட்டுரை

இந்நிலையில், ஞாயிற்றுகிழமை (நவம்பர் 1) அன்று, தமிழ்நாடு தினத்தை கொண்டாடிய, தமிழக மக்கள் முன்னணியின் தலைவரும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பொழிலனை, சென்னையில் உள்ள பாவலரேறு தமிழ்க் களம் அரங்கில் வைத்து தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த கைதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி போன்றோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தினம் – ‘வீட்டில் கொடியேற்றியதற்கு கைது ஏன்?’ – பொழிலன் கேள்வி

 

இதுகுறித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

அதில், ”நாட்டுக்கு எதிரி என்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் புனைந்து, சிறையில் அடைத்து இருப்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது.” என்று  கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல என்றும், இது பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம் என்றும் வைகோ கூறியுள்ளவர், ”எனவேதான் அரசு அமைப்புச் சட்டம் யூனியன் ஆப் இந்தியா என்று குறிப்பிடுகின்றது. அதன் பொருள் நாடுகளின் ஒன்றியம் என்பதுதான். இந்தக் கருத்தை இந்திய நாடாளுமன்றத்தில் நான் பலமுறை வலியுறுத்திப் பேசி இருக்கின்றேன். புத்தகமாகவும் அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை பற்றிக் குறிப்பிடும் வைகோ, “அது ஒரு நாடு அல்ல. அது 50 மாநிலங்கள் சேர்ந்த ஒரு ஒன்றியம். அங்கே ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிக்கொடி, தனி அரசு முத்திரை இருக்கின்றது. தனித்தனிச் சட்டங்களும் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டில் பாதி அளவு கூட இல்லாத சுவிட்சர்லாந்து நாட்டில், கேன்டன்கள் எனப்படும் 26 தனித்தனி ஒன்றியங்கள் உள்ளன. அந்த நாட்டின் அரசு அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதாக இருந்தால், அந்த 26 ஒன்றியச் சட்டமன்றங்களும் ஒப்புதல் தர வேண்டும். இது போல இன்னும் எண்ணற்ற எத்தனையோ நாடுகள் கூட்டு ஆட்சி அமைப்பைக் கொண்டு இருக்கின்றன.” என்று உதாரணங்களை அடுக்கி, இந்தியாவும் அத்தகைய கூட்டு ஆட்சி அமைப்பு ஒன்றியம்தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன்

 

இந்திய அரசு அமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி இருந்த, தனிக் கொடி ஏற்றும் உரிமையை, பாரதிய ஜனதா கட்சி அரசு பறித்து விட்டது என்று விமர்சித்துள்ளார்.

”ஐரோப்பாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி முத்திரை உள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் தனிக்கொடி உள்ளது.” என்றும், ”கல்லறைகளில்கூட தனித் தனி முத்திரைகள் பதிக்கப்படுகின்றன.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் தனக்கென ஒரு தனிக் கொடியை உருவாக்கி, அதற்கு சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது. ”இன்று கர்நாடக மாநிலத்தில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் கன்னட கொடி ஏற்றப்படுகின்றது.” என்று அதை நினைவூட்டியுள்ளார்.

அதுபோல, தமிழ்நாட்டிற்கு என தனிக்கொடி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும், அதைத் தடுக்கும் அதிகாரம் இந்திய ஒன்றிய அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ”நாகாலாந்து மாநிலம் தனிக்கொடி கேட்கின்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தனித் தனி முத்திரை இருக்கின்றது. அதுபோல தனிக்கொடியும் வேண்டும்.” என்று கோரிக்கை எழுப்பியுள்ளார்.

இறுதியாக, ”கருத்து உரிமையை நசுக்குகின்ற வகையில் அடக்கு முறையைக் கையாள்வதை மத்திய – மாநில அரசுகள் கைவிட வேண்டும். பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்று அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைபாளார் தோழர் பொழிலன் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக, அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வரும் 7-ம் தேதி, காலை 11 மணிக்குத் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

”இக்கூட்டமைப்பின் உறுப்பியக்கங்களும், தமிழர்-தமிழ்நாடு உரிமைகளை பேசுகிற பிற எல்லா அமைப்புகளும், தோழமைகளும் ஓரணியில் நின்று தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான தமிழக அரசின், காவல்துறையின் போக்கை கண்டிக்க வேண்டும்.” என்று அறைகூவல் விடுத்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்