Aran Sei

’சிறுபான்மையினர் மீது வன்மம்; பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையடைக்க வேண்டும்’ -வைகோ

மிழகத்தின் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் பாஜக பிரமுகர் கல்யாணராமனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என்றும்  அவருக்குப் பக்கபலமாகப் பின்னணியில் இருப்பவர்களையும் இனம் கண்டு தமிழக அரசு உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் வெறுப்பு அரசியலை மூலதனமாகக் கொண்டு இயங்கி வரும் இந்துத்துவ சனாதனக் கூட்டம், தமிழகத்திலும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கத் தொடர்ந்து முயல்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்த பாஜக அதைச் சகித்துக்கொள்ள முடியாமல் தமிழகத்தில் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கத் துடிக்கிறது.” என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

நபிகளை இழிவுப்படுத்தி பாஜக கல்யாண ராமன் பேச்சு: இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து கைது

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பெண்கள், வீதிக்கு வந்து போராடியபோது, ஆர்எஸ்எஸ் சங் பரிவாரங்கள் சிறுபான்மையினர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர் என்றும் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் என்கின்ற நபர், கோடிக்கணக்கான மக்கள் போற்றி வணங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து இழிவான கருத்துகளை பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தப் பேர்வழி பெரியாருக்கு எதிராகவும், திராவிட இயக்கத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினர் மீது வன்மத்துடனும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் நேரடியாகப் பேசி அவதூறு செய்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக கூறும் வைகோ, தமிழ்நாட்டில் மத வன்முறைகளைத் தூண்டவும், அதன் மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்ற நப்பாசையுடனும் கல்யாணராமன்  போன்ற நபர்களை ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கும்பல் பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக் களமாக மாறியுள்ளது இந்தியா – ஆய்வு முடிவு

தமிழகத்தின் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் பாஜக பிரமுகர் கல்யாணராமனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். தமிழக அரசு, அவருக்குப் பக்கபலமாகப் பின்னணியில் இருப்பவர்களையும் இனம் கண்டு  உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்