Aran Sei

தெற்குத்திட்டை தீண்டாமை: `தலைவருக்கு அவமானம்’ – செயலாளர் பணியிடை நீக்கம்

credit : dinakaran

ராட்சி மன்ற தலைவரை தரையில் அமரவைத்து கூட்டம் நடத்திய செயலாளர் பணியிடை நீக்கம். துணைத்தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டதின் கீழ் வழக்கு பதிவு.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 600 குடும்பங்களும் உள்ளன.

டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தெற்குத்திட்டை ஊராட்சிக்கு 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 1 உறுப்பினர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சரவணகுமார் ஊராட்சி மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீதி 5 பேர் மாற்றுச் சமூகத்தினர்.

கடந்த சுதந்திர தினத்தின் போது ஊராட்சி மன்ற தலைவர் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்ததால் அவரை கொடியேற்ற விடாமல் தடுத்து ஊராட்சிமன்ற துணைத்தலைவரின் தந்தை தேசியக்கொடியை ஏற்றி உள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஊராட்சி கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தரையிலும் மற்றவர்கள் நாற்காலியிலும் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகியது.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியின் கணவர் சரவணக்குமாரிடம் அரண்செய்  பேசியபோது “ஊராட்சித் தலைவரான என் மனைவியை கீழ்சாதி என்று தரையில் உட்கார வைக்கிறார்கள். கொடியேற்ற விடாமல் தடுக்கிறார்கள். துணைத் தலைவர் எப்போது சொல்கிறாரோ அப்போதுதான் ஊராட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என மிரட்டுகிறார். இதனால் வெளியே சொல்வதற்கு பயமாக உள்ளது” என்று கூறினார்.

“தற்போது மற்ற ஊராட்சி உறுப்பினர்கள் ஆதிக்கச் சமூகம் என்பதால் அவர்களின் மிரட்டல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஊராட்சியை நடத்த எந்த ஒத்துழைப்பும் கொடுக்க மறுக்கிறார்கள்” என்று சரவணகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணை நடத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் ஆகியோர் பஞ்சாயத்து அலுவலகம் சென்றிருப்பதாக தி இந்து  இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

துணைத்தலைவர் மோகன்ராஜ் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், செயலாளர் சிந்துஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தி இந்து –விடம் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஊராட்சி மன்றத் தலைவரை சவக்குழி தோண்ட வைத்தது, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவரான அமிர்தத்தைத் தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுத்தது, கோவை மாவட்டம் கிருஷணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாவை சாதி பெயர் சொல்லித் திட்டியது, என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடர்ந்து சாதியைக் காரணம் காட்டி அவமதிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்