Aran Sei

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவரைத் திட்டிய துறைத்தலைவர்

 

கல்விக் கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால் தனது துறைத்தலைவர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டினார் என சென்னைப் பல்கலைக் கழக மாணவர் ஒருவர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் லட்சுமணன் சென்னை பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் “இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்தா விட்டால் அதற்கு அபாரதமாக 1500 ரூபாய் வழங்க வேண்டும் என மாணவர்களிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பொதுமுடக்க காலத்தில் கடந்த ஐந்து மாதங்களாக எனது பெற்றோர் வேலையின்றி அன்றாடத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் குறித்த தேதிக்குள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் பகுதி நேரமாக வேலை செய்தாவது கட்டணத்தைச் செலுத்தி விடலாம் என வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் “ என்று கூறியுள்ளார்.

“ செப்டம்பர் 4ம் தேதி எனது துறைத்தலைவர் டாக்டர்.ஜே.சௌந்தரராஜன் என்னைத் தொடர்பு கொண்டு கல்விக்கட்டணம் செலுத்தாததற்காக கடுமையான வார்த்தைகளில் திட்டினார். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து கல்வியை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் நான். என்னை கல்விக்கட்டணம் செலுத்தாதற்கு இப்படியாக திட்டியது மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே துறைத்தலைவர் மீது இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அப்புகார்க் கடிதத்தில் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்படும் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் சார்பிலும் சம்மந்தப்பட்ட துறைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவும், மேலும் சில கோரிக்கைகளை முன் நிறுத்தியும் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

“பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்கள் படிக்கும் ஓர் பல்கலைக் கழகத்தில், அதுவும் இது போன்ற நெருக்கடியான காலத்தில் கல்விக்கட்டணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தக் வற்புறுத்துவது கண்டிக்கத்தக்கது.  கல்விக்கட்டணம் செலுத்தத் தவறினால் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை. அபராதத்துக்கு பயந்தே பல மாணவர்கள் கஷ்டப்பட்டு கல்விக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விளையாட்டுக் கட்டணம்,  கணினி மற்றும் நூலக பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவையும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களாக கல்லூரி இயங்காமல் ஆன்லைன் வகுப்புகள் மூலம்தான் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில் இந்தக் கட்டணங்கள் அவசியமற்றது. எனவே இக்கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். வசூல் செய்தவர்களிடம் திரும்ப அளிக்கக் வேண்டும் மற்றும் மாணவர் லட்சுமணனை தகாத வார்த்தைகளில் திட்டிய துறைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட உறுப்பினர் முருகன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்