Aran Sei

“ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது”- தமிழக பாஜக தலைவர் எல். முருகன்

Credits Indian Express

சென்னை தியாகராஜா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் எல். முருகன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

திமுகவின் சட்டப் பிரிவு கறுப்பர் கூட்டத்துக்கு உதவி செய்ததாகவும், பெண்களை இழிவாகப் பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு ஸ்டாலின் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் எல். முருகன் குற்றம் சுமத்தியுள்ளார்.

“பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் தாய்மையை பெண்மையை போற்றுபவர்கள். ஆனால் இன்றைக்கு சிலர் தாய்மையை கேவலப்படுத்துகிறார்கள். அப்படி செய்பவர்களுக்கு ஸ்டாலின் துணைபோகிறார்.” என்று பேட்டியில் கூறியுள்ளார்.

“கந்த சஷ்டி கவசத்தை கொச்சை படுத்திய கயவர் கூட்டத்தைச் சேர்ந்தவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப பிரிவில் பணி புரிந்துள்ளார். கறுப்பர் கூட்டத்துக்கும் திமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று ஸ்டாலின் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக பெண்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள். தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. என்னுடைய சகோதரனை, சகோதரியை சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டி முழு முயற்சியில் ஈடுபடுவேன். இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும்.” எனவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழக பாஜக ட்விட்டரில், “ஸ்டாலின் அவர்களே! தாய்க்குலமும் உங்களுக்கு எதிரி, ஆண்டவனும் உங்களுக்கு எதிரி, உங்கள் முதல்வர் கனவு ஒரு போதும் பலிக்காது, உங்கள் கனவு தகர்த்து எறியப்படுவது உறுதி.” என்று குறிப்பிட்டுள்ளது.

 

“பெண்களை இழிவாக பேசிய உங்களை மீனாட்சியம்மன் மாரியம்மன் போன்ற பெண் தெய்வங்கள், சும்மா விட மாட்டார்கள் தமிழ் கலாச்சாரம் பண்பாட்டுக்கு எதிராக பேசி வரும் இவர்கள் தமிழ் விரோதிகள் மட்டுமல்ல, தேச விரோதிகள், இவர்களை தூக்கி எறிய இந்த விஜயதசமி நாளில் சங்கல்பம் ஏற்போம்!” என்றும் தமிழக பாஜக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்