Aran Sei

முல்லைப்பெரியாறு துணைக்குழுவை கலைக்க தேவையில்லை: தமிழக அரசு

Credits: Vikatan

முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்யும் துணைக் குழுவை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையினை பராமரிக்க மற்றும் அணையின் பாதுகாப்பினை உறுதி செய்ய அணைக் கண்காணிப்பு குழு, துணைக்குழு ஒன்றை ஏற்படுத்தியிருந்தது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோசப், ஷீலா கிருஷ்ணன்குட்டி, ஜெஸ்ஸிமோள் ஜோஸ் உள்ளிட்டோர் ”அணையின் நீர்நிலை முறையாக கண்காணிக்கப்படவில்லை என்பதால் துணைக்குழு கலைக்கப்பட வேண்டும்” என உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அணையின் பராமரிப்பு பணிகள், பழுது நீக்கும் பணிகளின் விவரங்கள் தொடர்பாகவும் மனுவில் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

செப்டம்பர் 22-ம் தேதி வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கண்காணிப்பு குழுவின் முடிவுகளின் அடிப்படியில் துணைக்குழு முறையாக செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டு, துணைக்குழுவினை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கக்கூடிய வகையில் முல்லைப்பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும், உச்சநீதி மன்ற உத்தரவின்படி கண்காணிப்பு குழு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட்டு வருகிறது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் ”துணைக்குழு கண்காணிப்பு குழுவுக்கு உதவியாக மட்டுமே இருந்து வருகிறது. கண்காணிப்பு குழுவின் பொறுப்புகள் முற்றிலுமாக துணைக்குழுவிடம் ஒப்படைத்து உள்ளது என்ற குற்றச்சாட்டினை ஏற்க முடியாது” என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

”கேரள வெள்ளப்பெருக்கின்போது அணை திடீரென முன்னறிவிப்பு இன்றி திறக்கப்பட்டதாகக் கூறுவது தவறு. நீர் அரை அடி அதிகரிக்கும்போதெல்லாம் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டது. நீர் திறப்பு அதிகரிக்கும்போதும் தகவல் பரிமாறப்பட்டது. கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 131 அடியாகவே இருந்தது.” என்றும் தமிழக அரசு மனுவில் கூறியுள்ளாதாக தி இந்து செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய நீர் ஆணையத்தின் நிர்வாக பொறியாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள துணைக்குழு, கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. இந்தக் குழுவில் கேரளா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்