Aran Sei

வேல் யாத்திரை: ` சட்டத்தை மீறினால் நடவடிக்கை ’ – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

மிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அறிவித்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாளை (நவம்பர் 6) முதல், தமிழக பாஜக சார்பில், கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் `வெற்றிவேல் யாத்திரை’ நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணியில் தொடங்கி, திருச்செந்தூரில் நிறைவடையும்படி இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையை டிசம்பர் 6-ம் தேதி வரை நடத்தவிருப்பதாக முருகன் அறிவித்துள்ளார். அதற்கான அனுமதியைக் கோரி டிஜிபி, மாவட்ட எஸ்.பிக்களிடம் கடிதம் அளித்துள்ளனர்.

மதநல்லிணக்கத்திற்கு ஊடு விளைவிக்க முயற்சிக்கும் இந்த வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

வேல் யாத்திரைக்கு தடை வேண்டும் – சிபிஎம் பாலகிருஷ்ணன்

இந்நிலையில், நேற்று (நவம்பர் 4) வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களில், “தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தி, மொகரம் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடைபெறவுள்ளது. அதில், 3,000 முதல் 5,000 பேர் கலந்துகொள்ளவிருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள், பல துறை ஊழியர்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகும்,” எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

“யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்.” என்றும், “அதன் காரணமாகச் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது.” என்றும் மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மனுதாரர்கள் சார்பாக முறையிடப்பட்டுள்ளது. இதனை ஏற்ற நீதிபதிகள், செந்தில்குமாரின் மனுவை இன்று (நவம்பர் 5) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

`பாஜகவின் வரலாறே வன்முறை வரலாறுதான்’ – வேல்முருகன் காட்டம்

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜரானார். அதில், வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு, கடந்த 15-ம் தேதி பாஜக பொதுச் செயலாளர் டிஜிபியிடம் மனு கொடுத்தார் என்றும், சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிப்பாளர்களை அணுகும்படி, 17-ம் தேதி டிஜிபி பதிலளித்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், மனுக்கள் வந்தால் சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்க, காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “திருவள்ளூரில் பாஜக அளித்த மனுவில் கூட்டம் நடத்துவதுபோல மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்ற விவரங்கள் இல்லை. ஊரடங்கிற்கு முன்பாக 20.03.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவதைக் கருத்தில்கொண்டு போராட்டம் அல்லது பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்துள்ள உத்தரவு அமலில் உள்ளது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பாஜகவால் `வேல்’ ரத்தம் சிந்தக்கூடியதாக மாறும் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

தளர்வுகள் வழங்கப்பட்டாலும் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன என்றும், அதன்படி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் நவம்பர் 16 வரை அதிகப்படியாக 100 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.

“கொரோனாவின் இரண்டு மற்றும் மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜகவுக்குத் தெரிவிக்கப்படும்” என்று வாதிட்டுள்ளார்.

தமிழக பாஜக தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், குறிப்பிட்டு எந்தப் பகுதியையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கவில்லை என்றும், தனி மனித விலகலைப் பின்பற்றவே மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

`கர்ணம் அடித்தாலும் பாஜக கால் ஊன்ற முடியாது’ – தா.பாண்டியன்

மேலும் வாதத்தில், ”யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்தப் பகுதியிலும் தங்கப் போவதில்லை. பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் யாத்திரைக்குத் தடை விதிப்பது சரியல்ல. எந்த விதிகளையும், நிபந்தனைகளையும் யாத்திரை செல்பவர்கள் மீறப் போவதில்லை. வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். கும்பலாக யாரும் கூடப் போவதில்லை.” எனத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, ”வாய்மொழி உத்தரவாதத்தை நம்பமுடியாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நவம்பர் 15 வரை அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.” என்று சுட்டிக்காட்டியது.

மேலும், பாஜக தரப்பில், தமிழக அரசு முடிவெடுப்பதற்கு முன்பாகத் தடை கோரி தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்துத் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் தடை குறித்த விவரங்களைப் பாஜகவுக்குத் தமிழக அரசு தெரிவிக்கும் என்கிற அடிப்படையில் வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழக அரசின் தகவலுக்குப் பின், இதுகுறித்து பாஜக தரப்பில் தனியாக மேல்முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டே வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரையை பாஜக கைவிடுவது நல்லது. சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும். சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்