Aran Sei

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர் ஒருவர்  தலையில் பலத்த காயம் எற்பட்டுள்ளது அப்பகுதி மீனவர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.  அவர்கள் வழக்கம் போல கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 50-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.

அவர்கள் மீனவர்களை  மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி கற்கள் மட்டும் பாட்டில்களை  கொண்டு   தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தினர்.

இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதலில் மீனவர் சுரேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சக மீனவர்கள் உதவியுடன் சுரேஷ், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்.

மேலும் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பெருத்த  நஷ்டத்துடன் கரை திரும்பினர். உடனே மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாரம்பரிய இடத்தில் பிரச்சனை இல்லாமல் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மீனவர்கள் மீதான தாக்குதல்  சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் கொந்தளிப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

காயம் அடைந்த மீனவர் சுரேஷ்

இதுகுறித்து ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர் சங்க தலைவர் ஜேசுவிடம் அரண்செய் பேசிய போது, “கொரோனா காலத்தில் இந்த தாக்குதல் குறைவாக உள்ளது. இல்லை என்றால், கற்கள் பீர் பாட்டில்களை கொண்டு வீசுவது மட்டுமல்ல. வலைகளை கிழித்து விடுவது, பிடித்த மீன்களை எடுத்துக்கொள்வது, படகுகளை முட்டி அதை சேதப்படுத்துவது இதெல்லாம் அடிக்கடி நடப்பது தான்” என்று கூறினார்.

மேலும், “கச்சத்தீவிற்கு அருகில் போனாலே தாக்குகிறார்கள். ஆனால் இரு நாட்டு ஒப்பந்தத்தின் படி, அங்கே இரு நாட்டு மீனவர்களும் தங்கள் வலைகளை உலர்த்திக்கொள்ளலாம். ஓய்வெடுக்கலாம் என்று உரிமை உள்ளது.” என்று தெரிவித்தார்.

கச்சத்தீவில் மீன் பிடிப்பதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுற்று விட்டதாக இலங்கை அரசு கூறிவருவதை பற்றி கேட்கையில், “கச்சத்தீவில் மீன் பிடிப்பதற்கான கடந்த 1976-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும், புதுபித்து கொண்டு வர வேண்டும். அப்போது தான் நாங்கள் தடையின்றி மீன் பிடிக்க முடியும். இதை மத்திய மாநில அரசுகள் உடனே செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

இலங்கை தாக்குதல் குறித்து, மதிமுக கட்சியின் தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று நேற்று அல்ல; கடந்த 40 ஆண்டுகளாகவே, தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று இருக்கின்றது. ஆயிரக்கணக்கான மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய், பல மாதங்கள் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர்.” என்று இலங்கை கடற்படையின் அட்டூழியங்களை பட்டியலிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்களில் இந்திய அரசின் நடவடிக்கைகளை பற்றி குறிப்பிடும் போது, “அமெரிக்கக் குடிமகன் ஒருவரைத் தாக்கினால்கூட, உடனே அந்த நாட்டின் மீது அமெரிக்கா எதிர்த்தாக்குதல் தொடுத்து விடும். ஆனால், தமிழக மீனவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகும்கூட, இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா எச்சரிக்கை கூடச் செய்தது இல்லை என்பது வேதனைக்கு உரியது. இழப்பீடு எதுவும் பெற்றுத் தந்ததும் இல்லை.” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம், கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததுதான் என்று கூறும் அவர், ”அதை மீட்கக் கோரி, தமிழக மக்கள் எழுப்புகின்ற குரலை, இந்திய அரசு கண்டு கொள்வது இல்லை. தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கு, கச்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை, நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்