Aran Sei

எஸ்ஆர்பி-க்கு விவசாயத்தை பற்றித் தெரியாதா? – மு.க.ஸ்டாலின்

Image Credits: Asianet

த்தியில் ஆளும் கட்சியான பாஜக, வேளாண்மை தொடர்பான 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதிமுக தரப்பு உறுப்பினர்களால் மக்களவையில் இம்மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. இம்மசோதாக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு – அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மத்திய பாஜக அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதல்வரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும்,” என்று கூறியிருந்தார்.

Image Credits: New Indian Express
Image Credits: New Indian Express

பாஜக அரசின் விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கிய முதல்வர் பழனிசாமி – ‘ஒப்புதல் வாக்குமூலம்’ அளித்து விவசாயப் பெருமக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில், “மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட விவசாய மசோதாக்கள் விவசாயிகளுக்குத் தீங்கு விளைவிக்காது,” என்றும் “ஸ்டாலின் இம்மசோதாக்களை குறித்து ஒன்றும் தெரியாமல் பேசுகிறார். மக்களுக்கு எதிரான திட்டங்களை நாங்கள் எதிர்ப்போம்,” என்றும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

வேளாண் மசோதா விவகாரத்தில் திமுக, கூட்டணி கட்சிகளுடன் வரும் 28-ஆம் தேதி போராட்டத்தை அறிவித்து உள்ளது. இதற்கிடையே நாளை மறுதினம் நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், “பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை” என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் பேட்டி அளித்துள்ளார். வேளாண் மசோதா எதிர்ப்பில் தாங்கள் தீவிரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, “எஸ்.ஆர். பாலசுப்ரமணியனுக்கும் விவசாயத்தை பற்றித் தெரியாதா” என மு.க.ஸ்டாலின் முதல்வரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி “வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சிபிஎம்-ன் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனுடன் அரண் செய் பேசியபோது “இது பன்னாட்டு முதலாளிகளுக்குத் விவசாயத்தை ஒப்படைக்கும் மோசமான செயல். கொரோனா பேரிடர் காலகட்டத்தில் இந்த மசோதாக்களை நிறைவேற்றுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்