Aran Sei

தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் திருப்பம் – சி.பி.சி.ஐ.டி.க்கு விசாரணை மாற்றம்

தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான அதிமுக பிரமுகர் உட்பட இருவர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி தட்டார்மடம் அருகே சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த தண்ணீர் வியாபாரியான செல்வன், கடந்த 17-ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்து, அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வீசப்பட்டார். இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

முன்விரோதம் காரணமா?

முதற்கட்ட விசாரணையின் முடிவில், கொலை செய்யப்பட்ட செல்வனுக்கும் தட்டார்மடம் அருகே உசரத்துக் குடியிருப்பைச் சேர்ந்த அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தகர் அணித் தலைவரான திருமணவேல் என்பவருக்கும் இடையே சொத்துப் பிரச்சினை இருந்தது தெரியவந்தது. எனவே, தனிப்பட்ட பகை காரணமாக செல்வனை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்தது.

பொய் வழக்கு

தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேலின் தூண்டுதலால் செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது பொய் வழக்கு போட்டு துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் தெரிவித்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் இருவரின் மேலும் கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

முக்கிய குற்றவாளிகளான அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் மற்றும் முத்து கிருஷ்ணன் இருவரும் தலைமறைவானார்கள்.

நன்றி : இந்து தமிழ் திசை

கட்சியில் இருந்து நீக்கம்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சியின் கண்ணியதிற்கு மாசு எற்படுத்தியதாகவும் கூறி திருமணவேல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அ.தி.மு.க அறிவித்தது.

இந்நிலையில் திருமணவேல் மற்றும் முத்து கிருஷ்ணன் இருவரும் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்ற நடுவர் கவுதம் முன்பு இன்று சரணடைந்தனர்.

சிபிசிஐடிக்கு மாற்றம்

அயுதப்படைக்கு மாற்றப்பட்ட ஹரிகிருஷ்ணனை பதவி நீக்கம் செய்ய நெல்லை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டார். இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

உடலை வாங்க மறுப்பு

குற்றாவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை செல்வனின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வந்த உறவினர்கள், இந்த உத்தரவுகளை அடுத்து செல்வனின் உடலை வாங்க திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்படாதது குறித்து, மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஜெயகுமாரிடம் கேட்ட போது, “திருமணவேலிடம் விசாரனை முடிந்த பின் தான், ஹரிகிருஷ்ணனை கைது செய்வது குறித்து முடிவு எடுக்க முடியும்” என்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்