Aran Sei

மனுநீதி எதிர்ப்பு : திருமாவுக்குப் பெருகும் ஆதரவு

“சனாதன தர்மம் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது? பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தைகளாகப் படைக்கப்பட்டவர்கள். All women are prostitutes as per manu dharma. எல்லாப் பெண்களுமே விபச்சாரிகள்தான் கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள் இது “பிராமணப் பெண்களுக்கும் பொருந்தும் அடிநிலையில் கிடக்கிற இதர பெண்களுக்கும் பொருந்தும் “ என்று மனுதர்மம் கூறுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர் வலதுசாரிகள்.

“மனுதர்மம் பெண்களைக் கொச்சைப்படுத்துகிறது எனும் அர்த்தத்தில் நான் பேசியதை அரசியல் ஆதாயம் தேடுகிற சாதிவெறிபிடித்த, மதவெறிபிடித்த கும்பல் திட்டமிட்டு எனக்கெதிரான பொய்ப்பரப்புரைகளையும் அவதூறுகளையும் பரப்பி வருகிறார்கள்“ என்று இந்தப் பிரச்சனை குறித்து பதிலளித்தார் திருமாவளவன்.

இந்த விவகாரம் பூதாகாரம் அடைந்ததைத் தொடர்ந்து இந்துத்துவவாதிகளுக்கு எதிராக  தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்றிய பேரூர்களிலும் நகரங்களிலும் மனுதர்மத்தை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அவர் சென்னையில் நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்தார்.

இது தொடர்பாகப் பாஜக சட்டப் பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தமன் ஒரு ஆன்லைன் புகாரை அளித்தார். இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் காவலர்களுக்கு ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார் என்று ‘நியூஸ் மினிட்’ செய்தி குறிப்பிடுகிறது.

இதையடுத்து கலகம் விளைவிக்கும் கருத்தை வெளியிடுதல், மதம், இனம் சார்ந்து வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை உருவாக்குதல், மத உணர்வைப் புண்படுத்தும் நோக்கில் சொற்களைச் சொல்லுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் திருமாவளவன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்திப் பேசியது சரியா? திருமாவளவன் பேசியது மிகவும் தவறு; கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியது பற்றி, தி.மு.க., காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் திருமாவளவன் மீது பதிவு செய்த வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார் “வருணாசிரம – மனுஸ்மிருதி பெயரால் மறுக்கப்பட்ட பெண்ணுரிமையைச் சுட்டிக்காட்டி தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஏற்படுத்திய விழிப்புணர்வின் பின்னணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியுள்ளார்.

அதைத் திரித்து, சமூக வலைதளங்களில் பரப்பி மதவெறியைத் தூண்டுகிறவர்களை விட்டுவிட்டு, திருமாவளவன் அவர்கள் மீதே வழக்குத் தொடர்ந்திருக்கும் எடப்பாடி அ.தி.மு.க அரசின் காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது! உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி ”திருமாவளவன் கூறிய கருத்துக்களை திரித்து, புனைந்து அவதூறு பிரச்சாரத்தை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் செய்து வருகின்றனர். இதற்கு துணை போகிற வகையில் திராவிட இயக்கத்தின் பெயரில் கட்சி நடத்துகிற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, திரு.தொல்.திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது ஆகும்.

இத்தகைய வகுப்புவாத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், திரு.தொல். திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் துணை நிற்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தன்னுடைய அறிக்கையில் கூறியிருந்தார்.

மேலும் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னால் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்” பேச்சுக்குச் சுதந்திரம் உண்டு என்பதை நாள்தோறும் நினைவு படுத்த வேண்டுமா? இதுபோன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்? என்று கேள்வியெழுப்பிருக்கிறார்.

மேலும் மதிமுக வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வெளியிட்ட அறிக்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் அருமை சகோதரர் திருமாவளவன் அவர்கள், பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் யாரையும் புண்படுத்தும் நோக்கில் ஒருபோதும் பேசியது இல்லை. மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அதை வேறுவிதமாகத் திரித்து அவர் மீது சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர்.

உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். ஆனால், தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற எடப்பாடி ஆட்சி, இந்துத்துவ சக்திகளைத் திருப்தி செய்யவும், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் மீது, ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்து இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன் “ என்று கூறியிருந்தார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்

`தோழர் தொல்.திருமாவளவன் ஒரு இணையவழி கருத்தரங்கில் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பேசியதற்காக சங்பரிவார் அவர் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது.

மனுஸ்மிருதி மனித இனத்தைச் சாதிப்பாகுபாட்டிற்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் அடங்கிச் செல்வதை மனுஸ்மிருதி வலியுறுத்துகிறது. இத்தகைய காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களின் மீது தொடர்ச்சியான விமர்சனங்களை வைப்பதன் மூலமே நாகரிகம் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது.

எனவே, காவல்துறை தோழர்.தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிட வேண்டுமென்பதையும் பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறாகவும் கொச்சைப்படுத்தியும், தாக்குதல் நடத்தியோர் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

நேற்றைய தினம் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி , மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி , நாம் தமிழர் கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவே திருமாவளவன் பேசியது திரித்து வெளியிடப்பட்டது என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான தலைவர்களின் முக்கியக் குற்றச்சாட்டாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் அனைவரும் திருமாவளவனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தபடி மனுஸ்மிரிதியை தடை செய்ய கோரியும் மனுவை எரித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்