Aran Sei

‘காசியில் ஒரு குரங்குக் கூட்டம்…’ – தமிழக முதல்வரின் குட்டி ஸ்டோரி

துணிச்சலாகப் பிரச்சினைகளை எதிர்த்து நிற்க வேண்டும் என்று குட்டி ஸ்டோரி சொல்லித் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில் ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் மாநிலம் முழுவதிலும் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் முன் வைத்து வரும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், அதிமுகவில் பிளவு பற்றிய குற்றச்சாட்டுகள் இவற்றுக்கு மத்தியில், பல்வேறு அரசு விழாக்களிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பேசும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவற்றுக்கு பதிலளித்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, “தேர்தல் ஆணையத்தின் மரியாதை சேஷனால் உயர்ந்தது போல் சட்டப் பேரவை தலைவரின் வானளாவிய அதிகாரத்தை பி.எச். பாண்டியனால் மக்கள் தெரிந்து கொண்டனர். அவர் கட்சி, ஆட்சி மற்றும் சமூகப் பணியில் உத்வேகத்துடன் செயல்பட்டவர். திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி பச்சையாறு திட்டம், கொடுமுடியாறு திட்டம் போன்றவற்றுக்கு நீதிமன்றத்தில் வாதிட்டு அனுமதி பெற்றுத்தந்தார்” என்று கூறியுள்ளார்.

கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தியுங்கள் – மு.க.ஸ்டாலின் தேர்தல் வியூகம்

“ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை மனோன்மணியம் கல்லூரிக்காக வழங்கினார். திருநெல்வேலி மண்ணுக்கான வீரமும் அன்பும் அவரிடம் இருந்தது. அசாத்திய துணிச்சலுடன் அவர் செயல்பட்டார். அவரைப் போல் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்” என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

குட்டி கதை

“விவேகானந்தர் காசி துர்க்கை கோயிலில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் கூட்டம் ஒன்று கூச்சலிட்டுக்கொண்டு அவரை சூழ்ந்து கொண்டது. சில குரங்குகள் அவர் மீது பாய்ந்து பிராாண்டின. அவரது உடைகளையும் இழுத்தன. இதனால் பயந்துபோன விவேகானந்தர் குரங்குகளிடம் இருந்து தப்பித்து ஓடினார்” என்று முதல்வர் ஒரு கதை சொல்லியுள்ளார்.

’பாஜகவுடன் அதிமுக கூட்டணியை அறிவித்த நாளே, எங்கள் வெற்றி உறுதியாகி விட்டது’ – ப.சிதம்பரம்

“அப்போது அங்கிருந்த சந்நியாசி ஒருவர் அதை பார்த்து, விவேகானந்தரிடம், குரங்குகளை எதிர்த்து நில் என்று கூறினார். இதையடுத்து துணிச்சலுடன் குரங்குகளை விவேகானந்தர் எதிர்கொண்டார். அவரது கம்பீரமான தோற்றத்தைப் பார்த்த குரங்குகள் தப்பித்தால்போதும் என்று பின்வாங்கிச் சென்றன. இந்தக் கதையை அமெரிக்காவில் தனது சொற்பொழிவின்போது விவேகானந்தர் சுட்டிக்காட்டி பேசினார். அவரைப் போல் தைரியமாகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். துணிச்சலோடு இருந்தால் பிரச்சினைகள் விலகி ஓடும். கோழைகள் ஒருபோதும் வெற்றிபெற்றதில்லை” எனவும் முதலவர் கூறியுள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் எனும் கருத்து மோதல் தற்போது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் – நடவடிக்கை எடுக்க திமுக மனு

திமுக உட்பட எதிர்க்கட்சிகள் முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்