Aran Sei

‘பாஜகவை எதிர்ப்பதற்கு, பதவியைக் கூட இழக்கத் தயார் ‘ – திருமாவளவன் ஆவேசம்

னு தர்மத்தில் பெண்கள் இழிவு செய்யப்பட்டிருப்பது பற்றி ஒரு இணையவழி கருத்தரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரம் பெரிதாக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் மனுதர்மத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைக் கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.

பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு மறுப்பை எதிர்த்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், தான் தனியாக நின்றாலும் கூட தொடர்ந்து போராடுவேன் என்றும் இந்த விவாதத்தை நாடு முழுவதும் பரப்புவதை வரை ஓய மாட்டேன் என்றும் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உரையிலிருந்து ஒரு பகுதி

“நீ எவ்வளவு ஆட்டம் போட்டாலும் தமிழ்நாட்டில் உன் ஜம்பம் பலிக்காது. தமிழ்நாட்டில் பிஜேபி நீங்கள் வேரூன்ற முடியாது, காலூன்ற முடியாது, வேண்டுமென்றால் சலசலப்பை ஏற்படுத்த முடியும்.

எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், திருமாவளவன் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் இருந்து இதை எதிர்கொள்வான் என்று தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். கூட்டணியில் சீட்டு கூட வேண்டாம், இடம் தரவில்லை என்றாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் தேர்தலை இரண்டாம் பட்சமாக வைக்கிறோம், சமூக மாற்றத்தை முதல்பட்சமாக வைக்கிறோம்

என்னால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒருவேளை நெருக்கடி ஏற்படுமானால், அவர்களின் இசைவோடு நான் வெளியேறி நின்று போராடுவேனே தவிர, அதற்காக நான் பின்வாங்க மாட்டேன். திருமாவளவன் முன்னெடுத்தால், திமுகவுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது இடதுசாரிகளுக்கோ மதிமுகவுக்கோ தோழமை கட்சிகளுக்கோ ஒரு நெருக்கடி, அரசியல் நெருக்கடி ஏற்படுமேயானால், அத்தனை தலைவர்களின் ஒப்புதலோடு இந்த அணியில் இருந்து வெளியேறி நின்று திருமாவளவன் எதிர்த்துத் தொடர்ந்து போராடுவான்.

விசிகேவா, பாஜகவா தமிழகத்திலே என்று ஒரு கை பார்ப்போம், நாங்கள் தேர்தல் அரசியல் நடத்தக் கூடிய சராசரி கும்பல் அல்ல, தோழர்களே.

திருமாவளவன் அம்பேத்கரின் பிள்ளை, பெரியாரின் மாணவன் – இன்றைக்கு நடக்கிற விவாதம் தேசிய விவாதமாக மாறும் வரையில் ஓய மாட்டோம் என்று தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறேன் என்று கருதி விடக் கூடாது, தோழர்களே, இது நான் உள்வாங்கிய உணர்வு, இந்த சமூகக் கட்டமைப்பைப் புரிந்து கொண்ட உணர்வு. பெண்கள் உணர்கிற வரையில் என்னை விமர்சிக்கட்டும், அவர்கள் உணரும் போது திருமாவளவனே சரியான ஆள் என்று கட்டாயமாக ஒரு நாள் பேசுவார்கள். பெண்கள் மீதான இழிவைத் துடைக்க நான் போராடுகிறேன், என் மீதான பழியைத் துடைக்க நான் போராடவில்லை.

ஒரு நாள் உணரும் போது, நம்மை இவ்வளவு காலம் அடிமைப்படுத்தி வைத்திருப்பது, நம்மை இழிவுபடுத்தி வைத்திருப்பது மனுஸ்மிருதிதான் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

மன்னனாக இருந்தாலும் மனைவி மீது சந்தேகம், சாதாரண ஒரு ஆட்டோ ஓட்டக் கூடியவனாக இருந்தாலும் பொண்டாட்டி மேல சந்தேகம். இது எங்கிருந்து வந்தது, இந்த சைக்காலஜி, இந்த உளவியல்.

தங்கச்சி சிரிச்சாலும் சந்தேகப்படுறான், அக்கா சிரிச்சாலும் சந்தேகப்படுகிறான், பொண்டாட்டி சிரிச்சாலும் சந்தேகப்படுகிறான், வெளியே போகாதே, அங்கே போகாதே, இங்கே போகாதே, அவன்ட்ட உனக்கு என்ன வேலை, ஏன் பொது இடத்தில போய் நிற்கிறாய்?

இந்த ஆணாதிக்க உளவியல் எங்கிருந்து வந்தது? இந்த பயம் எங்கிருந்து வந்தது”

இது எல்லாவற்றுக்கும் மூல வேர் மனுஸ்மிருதி. இந்த ஆணாதிக்க உளவியல், தான் மேலானவன் என்று நினைப்பதை விட, பெண்கள் நமக்கு துரோகம் செய்வார்களோ என்று பயந்து பயந்து ஆண்கள் சாவதுதான் இந்த சமூகத்தில் இருக்கிற மிக மோசமான உளவியல்.

ஆண்களிடம் இருப்பது dominance என்ற சைக்காலஜி அல்ல, inferior complex என்ற சைக்காலஜி. அந்த inferior complexதான் இந்த dominance என்ற தோற்றத்தை உருவாக்குகிறது.”

திருமாவளவனை எதிர்த்து நடிகை குஷ்பு தலைமையில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நடிகை குஷ்பு கைது – “திருமாவை எப்படி அண்ணன் என்று அழைப்பது”

திருமாவளவன் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்று பாஜக தலைவர் எல் முருகன் கூறியதை ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

`நாவை அடக்கிப் பேசுங்கள்’ – பாஜகவிற்கு ஆதித்தமிழர் பேரவை எச்சரிக்கை

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்