Aran Sei

போஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை : ’அம்பேத்கர் போராடிப் பெற்ற உரிமையைக் கைவிடக்கூடாது’ – திருமாவளவன்

போஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசுகளின் மூலமே வழங்க வேண்டும் என்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் இதற்கான நிதியில் 10 சதவீத நிதியை உயர்த்த வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, இன்று (டிசம்பர் 24) திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,”விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்பட்ட போராட்டத்துக்குப் பிறகு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலரிஷ் என்னும் கல்வி உதவித்தொகை திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரப்போவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

`தலித் மாணவர்களின் கல்லூரிக் கனவைக் குழிதோண்டி புதைத்தது மோடி அரசு’ – மே 17 இயக்கம்

”இதற்கென 59 ஆயிரத்து 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென்றும், 60:40 என்ற விகிதத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதிச் சுமையைப் பகிர்ந்துகொள்ளும் என்றும், அதன்படி, 35 ஆயிரத்து 534 கோடி ரூபாயை மத்திய அரசும், மீதமுள்ள தொகையை மாநில அரசுகளும் செலவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு கல்வி உதவித்தொகையில் மத்திய அரசு தனது பங்கான 60 சதவீத தொகையை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துமென்றும், அதுபோல, மாநில அரசுகள் 40 சதவீத தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும் முடிவெடுத்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

`இதுதாய்யா மநு நீதி’- இட ஒதுக்கீடு பிரச்சனையில் வலுக்கும் கண்டனங்கள்

மேலும், “இது உரிய காலத்தில் மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, மத்திய அரசு நேரடியாக உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்குவது மாநில அரசுகளைப் புறக்கணிப்பதாகவும் பொருள் கொள்ளப்படும்.

எனவே, மத்திய அரசு தனது பங்குத் தொகையை மாநில அரசுகளிடம் அளித்து அவற்றின் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதே முறையாக இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடு குறைப்பு – திருமாவளவன் கடும் கண்டனம்

போஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை தொடர்பான இந்த முடிவின்படி எதிர்வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் 5 ஆண்டுகளுக்கும் ஒரே அளவு நிதியை ஒதுக்கினால் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் இதற்கான நிதியில் 10 சதவீத நிதியையாவது உயர்த்தி ஒதுக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அம்பேத்கர் போராடிப் பெற்ற இந்த போஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை என்ற உரிமையை இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் கைவிடக்கூடாது என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்