Aran Sei

திருமாவளவன் மீது வழக்குப் பதிவு – ஸ்டாலின் கடும் கண்டனம்

த உணர்வைப் புண்படுத்துதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அண்மையில் இணையவழி கருத்தரங்கில் கலந்துகொண்டார்.

https://www.facebook.com/GayuSV89/videos/1235014950231320/?sfnsn=wiwspwa&d=w&vh=i

அதில் அவர் பேசும்போது, ”மனுதர்மத்தின்படி, எல்லா பெண்களுமே விபச்சாரிகள்தான் கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும் பொருந்தும் அடிநிலையில் உள்ள இதரப் பெண்களுக்கும் பொருந்தும்“ என்று பேசியிருந்தார்.

அதற்குச் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொருபுறம், திருமாவளவன் கூறியது உண்மைதான் என்றும், மனுதர்மம் பெண்களை இழிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் பலர் திருமாவளவனின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து திருமாவளவன் பேசிய காணொளி யூடியூபிலிருந்து அகற்றப்பட்டது.

இது தொடர்பாகப் பாஜக சட்டப் பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தமன் ஒரு ஆன்லைன் புகாரை அளித்தார். இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் காவலர்களுக்கு ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார் என்று ‘நியூஸ் மினிட்’ செய்தி குறிப்பிடுகிறது.

இதையடுத்துக் கலகம் விளைவிக்கும் கருத்தை வெளியிடுதல், மதம், இனம் சார்ந்து வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை உருவாக்குதல், மத உணர்வைப் புண்படுத்தும் சொற்களைச் சொல்லுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் திருமாவளவன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது “ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தித் திருமாவளவன் பேசியது மிகவும் தவறு. கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியது பற்றி, தி.மு.க., காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன் “பெண்கள் எண்ணற்ற சிக்கல்களை எதிர்கொண்டதை நாங்கள் அறிவோம். பெண்கள் அடக்கப்படுவதற்கு மனு தர்மமே காரணம் என்று நம் முன்னோர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அம்பேத்கரும் பெரியாரும் மனுஸ்மிருதியை எரித்தனர். அவர்கள் ஆணாதிக்கத்தையும் ஒடுக்குமுறையையும் தூக்கிப்பிடிக்கும் இந்தப் புத்தகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

“ஒரு குழு அவர்களின் அரசியல் ஆதாயத்துக்காகத் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். நான் பெண்களுக்கு எதிராகப் பேசியது போல் அவர்கள் அதை சித்திரிக்க விரும்புகிறார்கள். ஆனால் அது தவறானது, நான் பெண்களின் விடுதலைக்காகப் பேசினேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, மனுதர்மத்தைத் தடை செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சனிக்கிழமை மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் போராட்டத்தில், மனு தர்மத்திற்கு எதிராகத் தமிழக மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையொட்டி, #RejectManu எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் மனுதர்மத்தை தடை செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

திருமாவளவன் மீது பதிவு செய்த வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று  திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதை திரித்து – வன்முறையைத் தூண்டும் மதவெறியர்களை விடுத்து திருமாவளவன் மீதே வழக்குப்பதிவு செய்த காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் மீது, எடப்பாடி அ.தி.மு.க. அரசின் சைபர் கிரைம் போலீசார், ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்திருப்பது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் பாரபட்சமான – வன்மம் நிறைந்த அணுகுமுறையையே காட்டுகிறது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்