Aran Sei

“விபத்துக்குக் காரணம் ஓட்டுநர் அல்ல, பொறியாளர்களும் அதிகாரிகளும்தான்” – தர்மபுரி எம்.பி

ர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திராவில் இருந்து சிமெண்ட் ஏற்றிவந்த லாரியில் பிரேக் பழுது ஏற்பட்டதால், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து, இன்று (டிசம்பர் 13) தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர் மருத்துவர். இரா.செந்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “விபத்தை  ஏற்படுத்திய சரக்குந்தின் ஓட்டுநர் தொப்பூர் காட்டுக்குள் ஓடி ஒளிந்து  கொண்டுவிட்டார். அவரை காவல்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்திருக்கின்றனர் என்பது செய்தி. ஆனால் உண்மையான குற்றவாளிகள் எந்தத் தண்டனையும் இன்றி எப்போதும்போல அவர்கள் இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.” என்று விமர்சித்துள்ளார்.

தொப்பூர்  கணவாயில் உள்ள இந்த இடத்தில் ஏறக்குறைய தினமும் ஒரு விபத்து  நடைபெறுகின்றது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஏழு ஆண்களுக்கு முன்பு நான் கேட்ட கேள்விகளுக்குத் தொப்பூர் காவல் நிலையமும், எல்&டி நிர்வாகமும் அளித்த பதில்களிலிருந்து ஒரு மாதத்துக்கு இரண்டு பேர் இறந்து போனதை அறிய முடிந்தது என்று மேற்கோள் காட்டியுள்ளார்.

”இந்த விபத்துகளுக்கான காரணமென்ன? இவற்றைத் தடுப்பதற்கு நிர்வாகம் செய்திருக்கும்  முன்னெடுப்புகள் என்ன? என்ற கேள்விகளுக்கு எல்&டி நிறுவனம் பின்வரும் பதில்களை  அளித்திருந்தது. முதலாவது, சாலையின் ஓரங்களையும், நடுப்பகுதியையும் தெளிவாகக் காட்டுவதற்காக ஒளிரும் பட்டைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.” என்றும் இரண்டாவது, ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடி வருகிறோம் என்று கூறியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “உலகச் சுகாதார நிறுவனம் வகுத்தளித்த “பத்தாண்டுகளுக்கான சாலைப் பாதுகாப்புத் திட்டம் 2011 – 2020” -ல் கூறப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறோம். சென்னை, கரக்பூர் ஐஐடி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டு விபத்துகளைத் தடுப்பதற்கான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கான சிறப்புத் திட்டங்களைத் திட்டமிடுகிறோம்.” என்று பதில் எழுதியுள்ளனர்.

இந்த முன்னெடுப்புகளில் விபத்துகள் நடப்பதற்கான காரணத்தை முழு மனதோடு ஆய்வு  செய்ததற்கான சான்றையும், அவற்றைத் தடுக்க வேண்டும் என்பதற்கான முழுமையான  ஈடுபாட்டையும் காண முடியவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

”இந்தப் பதில்கள் எனக்கு நிறைவாக இல்லாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தேன். தொப்பூர் கணவாயில் உள்ள இந்தக் குறிப்பிட்ட இடத்தில், பெங்களூர்  – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் 161.1 – 164 1.4 கிலோ மீட்டர்களுக்கு இடையில் உள்ள இந்த 300 மீட்டரில் எண்ணற்ற விபத்துகள் நடக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு 2013-ஆம் ஆண்டு இவ்வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் பாலு நடத்திய அந்த வழக்கினை அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேதகு சஞ்சய் கிஷான் கவுல் விசாரித்தார். வழக்கு நடைபெற்ற அன்று நான் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தேன்.” என்று கூறியுள்ளார்.

இந்தக் குறிப்பிட்ட இடத்தில் அதிகமான விபத்துகள் நடப்பதற்கான முதன்மைக் காரணம்  சாலையின் அமைப்பே என்ற என்னுடைய வாதத்தை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி அவர்கள், சாலை அமைப்பினை முழுமையாக ஆய்வு செய்து விபத்துகள் ஏற்படாத வண்ணம் சாலையை மாற்றியமைப்பதற்கான திட்டத்தை ஆறு மாதத்திற்குள் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததாகவும் இன்றுவரை, சாலை அமைப்பை மாற்றி அமைப்பதற்கான எந்த முயற்சியையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், எல்&டி நிறுவனமும் எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

”நீதிமன்றத்தில்  எல்&டி நிறுவனம் தாக்கல் செய்த பதிலில் ஓட்டுநர்கள் அதிக வேகத்தில்  செல்வதாலேயே விபத்துகள் ஏற்படுவதாக கூறியிருக்கிறது.  அனுமதிக்கப்பட்ட  எடையைவிட அதிக எடையுள்ள சுமைகளை சரக்குந்துகள் சுமப்பதனால் தான் அந்த  வளைவில் வண்டியை நிறுத்த முடியாமல் போய்விடுகின்றது என்பது மற்றொரு  குற்றச்சாட்டு. இதில் உண்மை இல்லாமல் இல்லை. பெரும்பாலான சரக்குந்துகள்,  ஏன் எல்லா சரக்குந்துகளுமே அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமான எடையுள்ள  சுமைகளைதான் எடுத்துச் செல்கின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

தொப்பூர்  கணவாயில் உள்ள சாலையை அமைக்கும்போது சரக்குந்துகள் சட்டப்படி சுமந்து  செல்ல வேண்டிய சுமையை மட்டுமே சுமந்து செல்லும் என்ற எதிர்பார்ப்புடன்  சாலையை அமைப்பதே தவறு என்று கண்டித்துள்ளார்.

”காகிதங்களில் உள்ள  சட்டங்களை மறந்துவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் சரக்குந்துகள் எவ்வளவு எடையோடு செல்கின்றன என்பதை கள ஆய்வு செய்து, அதனடிப்படையில், சட்டத்துக்குப் புறம்பாக அதிக எடையோடு செல்கின்ற வாகனங்களுக்குக் கூட தொப்பூர் கணவாயில் பயணிக்கும்போது விபத்து ஏற்படாத வண்ணம் சாலையின் அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த இடத்தில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்கான அறிவிப்புப் பலகைகள் இல்லை என்றும் வாகன ஓட்டிகளால்  வேகத்தைக் குறைக்க முடியாமல் போவதற்கான காரணம் சாலையின் அமைப்புதானே அன்றி அவர்களுடைய திறமையின்மை அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் ஓடும் நெடுஞ்சாலைகளில் ஒரே ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏறக்குறைய தினமும் விபத்து நடக்கிறது என்றால் அதற்கான காரணம் அந்த இடத்தின் சாலை அமைப்புதான். சாலை விபத்துகளுக்குக்கான முதன்மைக் காரணம் ஓட்டுநர்களின் தவறு என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. இது மிகவும் தவறான அணுகுமுறை மட்டுமல்ல.” என்று செந்தில் கூறியுள்ளார்.

”தேசிய  நெடுஞ்சாலை ஆணையமும், எல்எ&டி நிறுவனமும் இனி தொப்பூர் கணவாயில் உள்ள அந்தக் குறிப்பிட்ட ஆபத்தான வளைவில் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்ற  பொறுப்புணர்வோடு சாலை அமைப்பை மாற்றுவதற்குத் திட்டமிட வேண்டும். அதிக  எடையோடு வரும் சரக்குந்து ஓட்டுநர்களுக்கு மரண தண்டனை அளித்து வருவதை எல்&டி நிறுவனம்‌ உடனடியாக நிறுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஓட்டுநர்களைக் குற்றவாளிகளாகக் காட்டுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.‌ உண்மையான குற்றவாளிகள் எல்&டி நிறுவனத்தின் பொறியாளர்களும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளும்தான் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்