Aran Sei

‘800 படத்தின் அரசியலில் உடன்படாததால் நடிக்க மறுத்துவிட்டேன்’- நடிகர் டீஜே

Credits Teejay Twitter

முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மாட்டேன் என நடிகர் டீஜே அருணாச்சலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, நடிகர் விஜய்சேதுபதி, 800 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், முரளிதரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

அரசியல் கட்சி தலைவர்கள்   தொல்.திருமாவளவன், சீமான், ராமதாஸ், திரைத்துறைப் பிரபலங்கள் வைரமுத்து, பாரதிராஜா உட்பட பலர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் டீஜே அருணாச்சலம், இந்தப் படத்தில் முரளிதரனின் இளவயது கதாப்பாத்திரத்தில் நடிக்க அணுகப்பட்டபோது முடியாது என மறுத்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா-க்கு பேட்டியளித்துள்ளார்.

”நான் இந்தியாவில் இருந்தபோது 800 படத்தை எடுப்பவர்கள் என்னைத் தொடர்பு கொண்டார்கள். இயக்குனரை அவரின் அலுவலகத்தில் சந்தித்தேன். அவர் என்னிடம் கதை சொன்னார். இளம் வயது முத்தையா முரளிதரனாக நடிக்க கேட்டார்கள்.”

“800 படத்தில் இலங்கை அரசு மற்றும் தமிழர்களுக்கு இடையேயான போர் குறித்து காட்சி படுத்தப்பட்டுள்ள முறை எனக்கு சரியெனத் தோன்றவில்லை. என் அம்மா ஈழத் தமிழர். போரின்போது பல கொடூரங்கள் நடந்தன. இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள அரசியலில் தலையிட நான் விரும்பவில்லை.” என்று கூறி அதனால் படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “எனக்கு விஜய் சேதுபதி மீது மிகுந்த மரியாதை உள்ளது. அதனால் இந்த முடிவை எடுப்பதில் மிகவும் சிரமப்பட்டேன்.” எனவும் பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் டீஜே இதுகுறித்து ட்விட்டரில், “என் முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு ஆதரவளித்துள்ள அனைவருக்கும் நன்றி. என் தாய்மொழி தமிழே எனக்கு முதன்மை.” என்று கூறியுள்ளார்.

 

“கதைகளைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்தப்படம் குறித்து அவர் சரியான முடிவை எடுப்பார் என நான் நம்புகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுவரை ‘800’ படத்தில் நடிப்பதற்கு  எழுந்துள்ள எதிர்ப்பு குறித்தோ அல்லது ஆதரவு குறித்தோ நடிகர் விஜய் சேதுபதி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்