Aran Sei

‘தமிழ்வழி கல்வி பெற்றவர்களுக்கான இடஒதுக்கீடு நிறுத்தம்’ – வேல்முருகன் குற்றச்சாட்டு

காவல்துறையில் துணை ஆய்வாளர் பணியிடங்களில், தமிழ் வழியில் பயின்றவர்களுகான இடஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும் என்றும் இதில் தமிழக அரசு அலட்சியம் காட்டும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (டிசம்பர் 5) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறையில் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான 969 காலிபணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உடற்தகுதி தேர்வு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, நேர்முகத்தேர்வு என்பது ஒரு இடத்திற்கு 2 பேர் என்றவில் நடப்பது வழக்கமாகும்.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நீட் தேர்வால் தமிழ்வழி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறதா? – சீ. நவநீத கண்ணன்

”அப்பணியிடங்களுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டில் 196 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நேர்காணலுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றாது அதிர்ச்சியளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற துணை காவல் ஆய்வாளர் தேர்விலும் இதே போன்ற முறைகேடு நடைபெற்றது என்றும் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று ஒவ்வொரு நிலையிலும் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டால் மட்டுமே, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை முழுமையாக வழங்க முடியும் என்றும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ் வழியில் பயின்றவர்களுகான இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதுவரை நேர்முகத்தேர்வு நடைபெறுவதை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசை வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

”தமிழ் வழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்கப்பட்டால் மட்டுமே, ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் துணை காவல் ஆய்வாளர் பணி உள்பட எந்த அரசு பணிகளிலும் சேர முடியும்.” என்று தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்பவதாக கூறியுள்ளார்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடு குறைப்பு – திருமாவளவன் கடும் கண்டனம்

”இவ்விவகாரத்தில் தலையிட தமிழக அரசு அலட்சியம் காட்டும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும். மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.” என்று வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்