Aran Sei

‘தமிழக காவல்துறை என்கவுண்டர் கலாச்சாரத்தைக் கைவிட வேண்டும்’- தேசிய மனிதஉரிமை அமைப்புகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறையின் என்கவுண்டரால் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த என்கவுண்டர் சம்பவத்தைக் கண்டித்து தேசிய மனித உரிமை அமைப்புகள் கூட்டமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று முன் தினம் 6/1/2022 செங்கல்பட்டு மாவட்டத்தின் ரேடியோ மலை, மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது நண்பர் கார்த்திக் என்கின்ற அப்பு கார்த்திக் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். நண்பர்கள் இருவரும் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதால் செங்கல்பட்டு மாவட்டம் மிகவும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.
இக்கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து எந்த ஒரு விசாரணை அறிக்கையும் வெளிவருவதற்கு முன்பே செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறையால் அமைக்கப்பட்ட தனிப்படை காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் தினேஷ் மற்றும் மொய்தீன் எனும் இரண்டு இளைஞர்களை என்கவுண்டர் செய்து கொலை செய்துள்ளது.
முன்னதாக நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நண்பர்கள் இருவரின் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மாமண்டூர் அருகே பதுங்கியுள்ளதாகவும் அவர்களைப் பிடிக்கச் சென்றபோது அவர்கள் காவலர்களைத் தாக்கியதாகவும் காவல்துறையினர் தங்களைத் தற்காத்துக்கொள்ள என்கவுண்டர் செய்ததில் தினேஷ் மற்றும் மைதீன் ஆகியோர் சம்பவ இடத்தில் சுடப்பட்டு இறந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாகத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலைகள் நிலவுவதாகவும், அதிகமாக பாலியல் குற்றச்சாட்டுகள் நடப்பதாகவும் தமிழக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் போதெல்லாம் இது போன்ற போலி மோதல்களான என்கவுண்டர் கொலைகள் நடப்பதாக பல்வேறு தரப்பில் சந்தேகம் எழுப்பப்படுகின்றது. ஏனெனில் சமீபத்தில் இதேபோன்று சென்னை காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் என்கவுண்டர் கொலைகள் நடந்துள்ளது, அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் இரண்டு என்கவுண்டர் கொலைகள் நடைபெற்றுள்ளது.
காவல்துறை தங்களை ஹீரோவாக காட்ட இதுபோன்ற என்கவுண்டர் கலாச்சாரத்தைக் கையில் எடுப்பதை ஊடகத்துறைகள் ஊக்குவிக்கக் கூடாது. சமீபத்தில் சென்னை புறநகரில் பணியமர்த்தப்பட்ட காவல்துறையின் உயர் அதிகாரியை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற அடைமொழியோடு செய்திகள் வெளியிட்ட ஊடகத் துறையின் செயல்பாடுகள் மிகவும் கண்டனத்திற்குரியது.
ஆயுத கலாச்சாரமும் காவல்துறையே சட்டத்தைக் கையில் எடுத்து தண்டனை கொடுப்பதும் நீதித்துறைக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியான சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும் எனவே தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உயர்மட்ட கமிட்டி அமைக்க வேண்டும்.
இதுவரை நடைபெற்ற என்கவுண்டர் கொலைகளில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை உள்ளடக்கிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும், மேலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல் துறைக்கு மனித உரிமை சம்பந்தமான வகுப்புகளை அந்தந்த காவல் நிலையங்களிலேயே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
நேற்றைய தினம் செங்கல்பட்டில் நடைபெற்ற இரட்டை கொலையில் முழு விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரத் தமிழகக் காவல்துறையும் அரசும் முன்வர வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்கப்பட்ட  தமிழகமாகத் தமிழகத்தை உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கின்றோம் என்று தேசிய மனித உரிமை அமைப்புகள் கூட்டமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்