Aran Sei

தமிழ்நாடு தினம் – ‘வீட்டில் கொடியேற்றியதற்கு கைது ஏன்?’ – பொழிலன் கேள்வி

தமிழ்நாடு தினத்தை கொண்டாடிய, தமிழக மக்கள் முன்னணியில் தலைவரும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பொழிலனை, பாவலரேறு தமிழ்க் களம் அரங்கில் வைத்து தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நவம்பர் 1 ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1 ஆம் தேதியை  தமிழ்நாடு நாளாக கடைபிடிக்க, தமிழ்நாடு அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆணை பிறப்பித்தது.

கடந்த  அக்டோபர் மாதம் 20ஆம் தேதி, வெள்ளை நிற பின்புலத்தில் சிவப்பு நிற தமிழ்நாடு வரைபடம் கொண்ட கொடியினை தமிழ்நாடுக் கொடியாக, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் உள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தினர்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இவ்வாண்டு தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ் நாடு கொடி உருவாக்கப்பட்டு அதனை தமிழ்நாடு அரசே அதிகாரப்பூர்வமாக ஏற்க வேண்டும் என்றும் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்மொழியப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு நாள் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு கொடியை ஏற்றிய பெரியாரிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பொழிலன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மேடவாக்கம் பாவலேரேறு தமிழ்களத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடுநாள் பதாகைகள் மற்றும் மாடியில் கட்டப்பட்டிருந்த கொடிகள், தோரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும், கொடியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கோனார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ் நாடு நாள் கொண்டாட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் அன்னை சிலைக்கு மாலையிட, முழக்கங்களிட  அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்ட 4 பெண்கள், 3 சிறுவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அரண்செய் -யிடம் பேசிய பொழிலன் “தமிழ்நாட்டுக்கு என்று தனிகொடி ஏற்றி தமிழ்நாடு நாளை கொண்டாடக்கூடாது என காவல்துறை முன்கூட்டியே வலியிறுத்தியதாகாவும், அதனால் தான் பொது இடங்களில்  கொடியேற்றாமல் தன்னுடைய இல்லத்தில் கொடியேற்றியதாக கூறினார்”

“கர்நாடகா மாநிலத்தில் கர்நாடக அமைச்சர் சோமசேகர், மைசூர் பகுதியில் கர்நாடக கொடியை அரசு அதிகாரிகள் சூழ இன்று காலை ஏற்றியுள்ளார். அதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டு கொடியின் பதாகைகள், கொடி கம்பங்கள், தமிழ்நாட்டு கொடி முதலியவற்றை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்” என்று பொழிலன் கூறினார்.

பொழிலன் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தன்னுடைய ட்விட்ட்டர் பக்கத்தில் ”தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி வெளியிட்டதற்காக தோழர் பொழிலன் கைது. தமிழக அரசு தனிக்கொடி வெளியிட்டு அதற்கு மாறாக பொழிலன் வேறு கொடியை ஏற்றியிருந்தால் இதனைக் குற்றமென கருதலாம். அவ்வாறின்றி, அவரைக் கைதுசெய்யும் அரசின் இந்தப்போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் ஒருவரும் மே 17 இயக்கத்தின் ஓருங்கிணைப்பாளாருமான திருமுருகன் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “மதுரையில் தோழர்கள் கைது, சென்னையில் தோழர்.பொழிலன் கைது, திருவாரூரில் கைது, ஈரோட்டில் கைது என அனைத்திடங்களிலும் அடக்குமுறை ஏவப்பட்டாலும் தமிழ்நாட்டு விழா பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தோழமைகளால் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டு நாளை கொண்டாடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்