Aran Sei

அமைச்சர் துரைக்கண்ணு மரணம் – தலைவர்கள் அஞ்சலி

credits : bbc

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஆர்.துரைக்கண்ணு மார்ச் மாதம் 1948 ல் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் இருக்கும் ராஜகிரி என்னும் ஊரில் பிறந்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டபோது அக்கட்சியில் சேர்ந்த இவர், மாணவரணி, இளைஞரணி உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். பாபநாசம் ஒன்றியத்தின் அ.இ.அ.தி.மு.க செயலாளராகவும் இருந்துள்ளார் துரைக்கண்ணு. பாபநாசம் தொகுதியில்  மூன்று முறை போட்டியிட்டு (2001, 2006, 2011) சட்டமன்றத்திற்குச் சென்றவர். அன்றைய முதல்வர்  ஜெ.ஜெயலலிதா மே மாதம் 2016 ம் ஆண்டில் இவரை வேளாண் துறை அமைச்சராக்கினார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த மாதம் 12-ம் தேதி  இரவு சேலத்தில் மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காரில் சேலத்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் விழுப்புரம் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மறுநாள் காலை அவர் அங்கிருந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்துள்ளது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று மூச்சு விடுவதில் அவருக்குக் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மூச்சுத்திணறல் பிரச்சினையைச் சரி செய்ய டாக்டர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே அமைச்சர் துரைக்கண்ணுவிற்குக் கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பதைக் கண்டறிய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா பாதிப்பைச் சரி செய்யும் சிகிச்சை ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் போதே திடீரென அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் அதிகமானது. இதய பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து உடனடியாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவரது நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், நுரையீரலில் தொற்று அதிகரித்ததால் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்துள்ளது.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது நுரையீரலில் 90 சதவீதம் தொற்று ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். பல உயர் சிகிச்சைகளை அளித்தாலும் அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதுமில்லை என்று மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்திருந்தனா். மருத்துவக் குழுவினா் அவரை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு ”மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்” எனக் காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த அமைச்சர், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார் என அவருக்கு சிகிச்சையளித்துவந்த காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. அமைச்சரின் உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின் அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்