Aran Sei

தெற்குத்திட்டை வன்கொடுமை: சமூக விழிப்புணர்வு மையம் விரிவான அறிக்கை

ராட்சி மன்றத் தலைவரைத் தரையில் உட்கார வைத்த விவகாரத்தில், தலைமறைவாக உள்ள துணைத் தலைவரைக் கைது செய்து, பணி நீக்கம் செய்வதுடன், பட்டியல் சாதியினர் தலைவராக உள்ள 241 ஊராட்சிகளிலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்று இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்குத்திட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 600 குடும்பங்களும் வசித்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தெற்குத்திட்டை ஊராட்சிக்கு 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீதி 5 பேர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

(அறிக்கையை வாசிக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தரையிலும் மற்றவர்கள் நாற்காலியிலும் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ், ஊராட்சிச் செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கு குறித்து இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் இயக்குனர் வே.அ.ரமேசுநாதன், அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “கண்டறியப்பட்டவை” என்ற தலைப்பில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களான ஊராட்சி தலைவி ராஜேஸ்வரி மற்றும் உறுப்பினர் சுகன்யா மீது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் தலித் அல்லாத 4 உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டு, சாதி ரீதியிலான பாகுபாடுகளைச் செய்கிறார்கள். தலைவரைச் செயல்பட விடாமல், அவரை அச்சுறுத்தி, “பேருக்குதான் நீ தலைவர். இங்கு எல்லாமே நான்தான்’ என்று மிரட்டுகிறார்கள். எனவே,  தலைமறைவாக உள்ள துணைத் தலைவரை உடனடியாகக் கைது செய்து, பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

விரிவான வாக்குமூலம்

சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்பாகக் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், தலைவர் ராஜேஸ்வரி நம்புகிற வழக்கறிஞர் உடனிருக்க, விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

உறுப்பினரின் வாக்குமூலம்

ஊராட்சி மன்ற தலித் உறுப்பினர் சுகன்யா மீதும் தீண்டாமைப் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அவரிடமும் புகார் பெற்று, அதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

பூட்டு உடைப்பு

தலித் குடியிருப்பில் இருந்த குடிநீர் மோட்டர் கொட்டகையின் பூட்டினை உடைத்த ஊராட்சி துணைத் தலைவர் மோகன் ராஜ் மற்றும் 6-வது வார்டு உறுப்பினர் சுகுமார் ஆகியோர் மீது, பொது வளமான குடிநீரைப் பயன்படுத்துவதைத் தடுத்து, வன்கொடுமை இழைத்த குற்றத்திற்காக எஸ்.சி/எஸ்.டி சட்டம் 3(1)(za) A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

பட்டியலின ஊராட்சி தலைவர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 683 ஊராட்சிகள் உள்ளன. இதில் 241 ஊராட்சிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 237 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் 4 பழங்குடி இன வகுப்பைச் சேர்ந்தவர்களும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பல ஊராட்சி தலைவர்கள் தாங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்றும், சாதிய வன்கொடுமை மற்றும் தீண்டாமை பாகுபாடுகளுக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எனவே கடலூர் மாவட்ட ஆட்சியாளர், மாவட்டத்தில் உள்ள அந்த 241 ஊராட்சிகளுக்கு நேரடியாகச் சென்று, முறையான விசாரணை நடத்த வேண்டும்.

உரிய பாதுகாப்பு 

தெற்குத்திட்டையில் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி மற்றும் உறுப்பினர் சுகன்யா ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் இயக்குனர் வே.அ.ரமேசுநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்