Aran Sei

விவசாயிகள் போராட்டம் : கைக்கோர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம்

விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் அறிவித்த பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து, சேலம் மாவட்டத்தில் 70 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் : 8-ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (டிசம்பர் 8) விவசாய சங்கங்கள்,  அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பும் தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தென் மாநிலங்களில், இன்று (டிசம்பர் 8) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, 25 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட மாட்டாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது.

விவசாயிகள் அழைப்புவிடுத்த முழு அடைப்பு – ஒன்றிணையும் தமிழகக் கட்சிகள்

அதை தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 32 ஆயிரம் லாரிகளில் பெரும்பாலான லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் சேலம் சத்திரம், சண்முகா பகுதியில் உள்ள சரக்கு ஏற்றி இறக்கும் கூட்ஸ் நிலையங்களில், லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், சேலம் செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் திரளான லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும்,  எரிபொருள் நிலையங்கள் மற்றும் லாரி நிறுத்தங்களில், லாரிகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் போராட்டம்: `ஷாஹீன் பாக் பாட்டி கைது’

இந்தப் போராட்டத்தையொட்டி, உள்ளூர்களில் இயங்கும் 40 சதவீத லாரிகளில் பாதி அளவே இயக்கப்பட்டுள்ளன என்றும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் 60 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை என்று சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள்ங்க தலைவர் சென்னகேசவன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்