Aran Sei

விசிக – வின் ‘மனுதர்ம எதிர்ப்பு போராட்டம்’ – ஆதரவும் எதிர்ப்பும்

நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெண்களை பற்றி தவறாக பேசியதாக காணோளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதில், ”எல்லா பெண்களுமே விபச்சாரிகள் தான் கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள்  இது பிராமணப் பெண்களுக்கும் பொருந்தும் அடிநிலையில் கிடக்கிற இதர பெண்களுக்கும் பொருந்தும் “ என்று மனுதர்மம் கூறுவதாக பேசியிருந்தார்.

அதற்கு சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் ஆதரவும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மகளிரை இழிவுசெய்யும் மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தித் தமிழகமெங்கும் நாளை (அக்டோபர் 24) மாலை 3 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

”சனாதன ஹிந்து தர்மம் பற்றி தொடர்ந்து பொய் பரப்பி வருகின்ற அனைத்து ஹிந்து சமுதாய மக்களையும் ஏற்கனவே சரக்கு மிடுக்கு பேச்சால் அவமதித்த தீயசக்தி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்யவேண்டும்.” என கூறியுள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்திப் பேசியது சரியா? திருமாவளவன் பேசியது மிகவும் தவறு; கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியது பற்றி, தி.மு.க., காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேநேரம், திருமாவளவனுக்கும் விசிக-வின் போராட்டத்திற்கும், பல கட்சிகளையும் இயக்கங்களை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,

மனுதர்மத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வாழ்த்துகள் தோழர் திருமாவளவன். பெண்கள்,உழைக்கும் மக்கள் என அனைவரையும் இழிவு செய்யும் மனுதர்மம் நாகரிகமடைந்த எவராலும் ஏற்கமுடியாதது. வாய்ப்புள்ள அனைவரும் பங்கேற்போம், ஆதரிப்போம்,போராட்டத்தை விரிவுபடுத்துவோம். மனுதர்ம இழிவை துடைத்தெறிவோம்.” என்று குறிப்பிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை விடுத்திருக்கிறார். அதில், “தற்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய தோழர் தொல் திருமாவளவன் அவர்கள் மனுசாஸ்திரம் குறித்து ஆற்றிய உரையின் ஒரு பகுதியை வெட்டி உருவி எடுத்து, அதை வைத்துக்கொண்டு கேவலமான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

மனு சாஸ்திரத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபெறுகிற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன் தனது முகநூல் பக்கத்தில் , ”சனாதானத்தைவிட ..மனிதாபிமானமே உயர்ந்தது…!” என்று திருமாவளவனின் ஓவியத்தோடு பதிவு செய்துள்ளார்.

https://www.facebook.com/1999000816860851/posts/3502985656462352/

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “மனுவாதி மனிதவிரோதி” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல், திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் மற்றும் மேலும் பல சமூக இயக்கங்கள் விடுதலை சிறுத்தைகளின் போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளதுடன், போராட்டத்தில் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளன.

திருமாவளனுக்கு ஆதரவாக ‘பெண்ணுரிமைப்போராளிதிருமா’ என்ற ஹாஷ்டாக், ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. அது  இன்று தமிழக அளவிலான  ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்