Aran Sei

‘அமைச்சர் துரைக்கண்ணுவின் மரண அறிவிப்பில் மர்மம்’ – ஸ்டாலின்

றைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரண அறிவிப்பில் மர்மம் உள்ளதாகத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு நெருக்கமானவர்களைக் கைது செய்வதன் நோக்கம் குறித்து அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமான கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மனஞ்சேரிப் பகுதியைச் சேர்ந்தவர் பெரியவன் என்கிற முருகன் (39). இவர்மீது கும்பகோணம் பகுதி காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (நவம்பர் 7) இரவு திடீரெனக் காவல் துறையினரால் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணம் தெரிவிக்கக் காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கும்பகோணம் புறவழிச்சாலையில் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புறவழிச்சாலைப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, காவல்துறை ஐ.ஜி.ஜெயராம் தலைமையில் 4 மாவட்ட எஸ்பிக்கள் மேற்பார்வையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், காவல்துறையினரும் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் விஜயனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், பேச்சுவார்த்தையை நிராகரித்துச் சாலை மறியல் தொடர்ந்துள்ளது. இதையடுத்துக் காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் கலைந்து போக அறிவுறுத்தியுள்ளனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து அதே இடத்தில் அமர்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மறியலில் ஈடுபட்டவர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்த ஆயத்தமாகியுள்ளனர். அதை அறிந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

இதற்கிடையில் முருகனுடன் அவரது சகோதரி மகன் சக்திவேல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வேதா, கும்பகோணம் நகர பாமக முன்னாள் செயலாளர் பாலகுரு ஆகியோர் மீதும், காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அக்டோபர் 31ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

அமைச்சர் துரைக்கண்ணு மரணம் – தலைவர்கள் அஞ்சலி

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் துரைக்கண்ணுவுக்குப் பல்வேறு வகைகளில் பக்கபலமாக இருந்துள்ளனர். அவருடைய மரணத்தைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தக் கைதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”வேளாண் துறை அமைச்சராக இருந்த திரு.துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமான கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகனைக் கைது செய்ய ஐ.ஜி. தலைமையில் 500 காவல்துறையினர் எதற்கு? பயங்கர பின்னணி என்ன? மேலும் 4 ஆதரவாளர்கள் கைது ஏன்?” என்று கேள்விகள் எழுப்பியுள்ளார்.

மேலும், “துரைக்கண்ணு உயிருக்குப் போராடியபோது அ.தி.முக.வின் தலைமை பல நூறு கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது. பணத்திற்கு உத்தரவாதம் கிடைத்த பிறகே மரண அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்களின் ஆட்சியில், ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் என்பதைப் புறக்கணிக்க முடியவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குடும்பத்திடம் கொடுத்து வைக்கப்பட்டு மீட்கப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.300 கோடி முதல் ரூ.800 கோடிவரை இருக்கும் என்று செய்திகள் சொல்கின்றன என்றும், இதில் கணக்கில் வராத தொகை எவ்வளவு வரும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி  எழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்