கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கவும் – கட்டாயமாக கற்பிக்கவும் உத்தரவிட்டு, தமிழகத்தில் சமஸ்கிருத, இந்தித் திணிப்பை அறவே கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்து, தேர்ச்சி (பாஸ்) அடைந்தால் மட்டுமே, 6-ம் வகுப்பிலிருந்து 7-ம் வகுப்பிற்குச் செல்ல முடியும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சம்ஸ்கிருதத்திற்குப் பதில், தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது என்று வெளிவந்துள்ள இன்னொரு தகவல் பேரதிர்ச்சியளிக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருத திணிப்பிற்கு மாணவர்கள் எதிர்ப்பு – கைது செய்த பாஜக அரசு
உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்தில் வாழும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியை பின்னுக்குத்தள்ளி – வழக்கொழிந்து போன சம்ஸ்கிருதத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிக்கும் மத்திய பாஜக அரசின் தாய்மொழி விரோத நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
“தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடர்பான வழக்கு ஒன்றில், “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக தமிழ் கற்பிக்கப்படுகிறது” என மத்திய அரசின் வழக்கறிஞரே சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் “பிரெஞ்சு, ஜெர்மன், வங்காளம் உள்ளிட்ட மொழிகளைக் கற்கலாம். ஆனால், தமிழ் நாட்டில் தமிழ்மொழியைக் கற்கக் கூடாதா?” என்று உணர்வுபூர்வமாக – நியாயமாகக் கேள்வி எழுப்பியதை மத்திய பாஜக. அரசு இன்றுவரை உணரவில்லை!” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் அதிகரித்து வரும் பிராந்திய மொழிகளின் பயன்பாடு – இந்தி எதிர்ப்புதான் காரணமா?
சமஸ்கிருதத் திணிப்பு தவிர, 6 முதல் 8-ம் வகுப்பு வரை “இந்தியும் கட்டாயம்” என்றும் – ஆனால், “தமிழ் கட்டாய மொழிப் பாடம் இல்லை” என்றும் அந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“அன்னைத் தமிழ்மொழியை, சொந்தத் தமிழ் மண்ணிலேயே அவமதிக்கும் துணிச்சல், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எப்படி, எங்கிருந்து வந்தது? விரும்பியது அனைத்தையும் இங்கே செய்து கொள்ளுங்கள்; இது உமது மேய்ச்சல் நிலம்” என்று பழனிசாமி குத்தகை சாசனம் எழுதிக் கொடுத்திருக்கிறாரா?” என்று அவர் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களே இல்லை என்ற அவல நிலை; அதிமுக., அரசு, பாஜகவிடம் கும்பிட்டுக் கூட்டணி வைத்து குழைந்து குழைந்து குற்றேவல் செய்வதால் விளைந்துள்ள விபரீதம் ஆகும். தமிழகத்தில் தமிழ்மொழிக்கு உரிய இடம் இல்லை – பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனமும் இல்லை என்று மதிமயங்கிச் செயல்படும் மத்திய பாஜக. அரசு – இந்திப் பேசும் மாநிலங்களில் இதுபோன்று “இந்தி கட்டாயம் இல்லை”; “இந்தி கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்க மாட்டோம்” என்று சொல்லி விட முடியுமா?” என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்திக் குறிப்பு : உயர்நீதி மன்றத்தில் முறையீடு
“ஏன், இந்தி பேசும் மாநிலங்களில் “இந்தியும், சம்ஸ்கிருதமும் கட்டாயம் இல்லை; தமிழ் மொழி கற்பது கட்டாயம்” என்று அறிவிக்கும் மனதைரியம் கிஞ்சித்தேனும் இருக்கிறதா? மாணவர்கள் தமிழில் தேர்ச்சி (பாஸ்) அடைந்தால் மட்டுமே, 6-ம் வகுப்பிலிருந்து 7-ம் வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்தி பேசும் வட மாநிலங்களில் உத்தரவு பிறப்பித்து விட முடியுமா? ஆனால் அங்கெல்லாம் செய்ய சிறிதும் துணிச்சல் இல்லாத மத்திய பாஜக. அரசு – “தமிழ்நாட்டில் தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டோம் – தமிழாசிரியர்கள் நியமிக்க மாட்டோம்” என்று ஆணவமாகக் கூறுவதற்குக் காரணம், தமிழகமும் – தமிழர்களும் இளிச்சவாயர்கள், ஏமாந்த சோனகிரிகள் என்ற எண்ணமா?” என்று அவர் கண்டித்துள்ளார்.
“தமிழ்நாட்டில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ்மொழியை ஏன் கற்பிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு – அதாவது சட்டத்தின் ஆட்சிக்கு, மத்திய பாஜக. அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்கவும் – கட்டாயமாக கற்கவும் உத்தரவிட்டு – சம்ஸ்கிருத, இந்தித் திணிப்பை தமிழகத்தில் அறவே கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பதவிப் பித்து பிடித்து, எல்லா உரிமைகளையும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, தமிழர்களுக்கும் – அன்னை தமிழ்மொழிக்கும் செய்யும் துரோகத்தை உணர்ந்து – கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க மத்திய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“தமிழ் செம்மொழிக்கு, “அதிமுக. – பாஜக. அரசுகள்” கை கோர்த்து உருவாக்கும் பேராபத்தை தமிழகம் ஒருபோதும் மறக்காது; மன்னிக்காது; தமிழகத்தின் எதிர்காலமாம் இன்றைய மாணவ – மாணவியர் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள் என்று எடுத்துரைக்க விரும்புகிறேன்.” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.