Aran Sei

’பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா?’ – புதிய மயிலாடுதுறை மாவட்டம் குறித்து ஸ்டாலின் கேள்வி

வசர கதியில் திறக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் எந்த உள்கட்டமைப்பு வசதியையும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் பேர் வைத்தாயே, சோறு வைத்தாயா? என்பது போல்தான் முதல்வர் பழனிசாமியின் செயல் உள்ளது என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாகை, திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ சட்டசபைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பேசியுள்ளார்.

அதில், “இன்றைய தினம் காலையில் அவசர அவசரமாக மயிலாடுதுறை மாவட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்தீர்களே, என்ன செய்தீர்கள் என்று நான் மாலையில் கேள்வி எழுப்புவேன் என்பதை உணர்ந்து இன்று காலையிலேயே தொடங்கி வைத்துள்ளார் முதல்வர்.” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் – நடவடிக்கை எடுக்க திமுக மனு

“கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி, மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டம் குறித்து முதல்வர் அறிவிப்பு செய்தார். அதையடுத்து, ஏப்ரல் 7-ம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. சிறப்பு அதிகாரி ஒருவரை ஜூன் மாதம் நியமித்தார்கள். எல்லைப் பிரிப்புக் குழுவை அமைத்தார்கள். இதுவரை எல்லை பிரிக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 8 மாதங்கள் போய்விட்டன என்றும் இன்று டிசம்பர் 28-ம் தேதி. அதாவது ஒன்பதாவது மாதமும் முடிந்துவிட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆட்சியர் அலுவலகம் எங்கே? காவல்துறை ஆணையர் அலுவலகம் எங்கே? தரங்கம்பாடி சாலையில் இருக்கும் ஆர்.டி.ஓ. அலுவலக பங்களாவில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது. விவசாய விரிவாக்க மையத்தில்தான் எஸ்.பி. அலுவலகம் இருக்கிறது. இதுதான் புதிய மாவட்டமா?” என்று முதல்வரை நோக்கி கேள்விகளை அடுக்கியுள்ளார், ஸ்டாலின்.

‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ – உதயநிதி ஸ்டாலின் உறுதி

“மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டம் உதயமாகும் இந்த நாளில் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை உடைந்து முக்கியப் பகுதிகளில் சாக்கடை ஓடுகிறது என்று பொதுமக்கள் சொல்கிறார்கள். இதுதான் ஒரு மாவட்டத் தலைநகரத்தின் லட்சணமா? புதிய மாவட்டம் உதயமானால், அதற்கான உள்கட்டமைப்பு வசதி செய்து தரப்பட வேண்டாமா? சும்மா பேர் வைத்தால் போதுமா?” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா?’ என்று கேட்பார்களே, அதுபோல ஒரு முதல்வர் நடந்து கொள்ளலாமா என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

”நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர், இதுவரை நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஏதாவது பதில் சொல்லி இருக்கிறாரா? என்று பார்த்தேன். எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவரால் சொல்ல முடிந்தால்தானே சொல்வார்?” என்றும் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்