Aran Sei

எஸ்சி, எஸ்டி சட்டம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன்

thirumavalavan

ன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறதென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து உடனே சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“தனிமையில் ஒருவரை சாதிப் பெயரால் திட்டினால் அது குற்றமாகாது” – உச்சநீதிமன்றம்

மேலும் அவ்வறிக்கையில் “எஸ்சி /எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஒருவரை யாரும் பார்க்காத விதத்தில் அவமானப்படுத்தினால் அது வன்கொடுமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வற்புறுத்துகிறோம்.

ஹிதேஷ் வர்மா – எதிர் – உத்தரகாண்ட் மாநில அரசு என்ற வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 (1) (r) பொருந்தாது என்றும் பாதிக்கப்பட்டவர் வீட்டுக்குள் தனியே இருக்கும்போது அவரை அவமானப்படுத்தும் விதமாகப் பேசியது எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் வராது என்றும் புதிய விளக்கத்தை அளித்திருக்கிறது.

மற்றவர்களுக்குத் தெரியும் விதமாகப் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டால்தான் அது குற்றம் இல்லாவிட்டால் அது குற்றம் இல்லை என்று உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. இதையே பெண் ஒருவருக்குப் பொருத்திப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். எவரும் அறியாமல் பெண்ணொருவர் களங்கப்படுத்தப்பட்டாலோ அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாலோ அது குற்றமே ஆகாது என்று உச்ச நீதிமன்றம் கூறுமா?

‘பார்வையாளர்கள் முன்னால் செய்யப்பட்டால்தான் அவமதிப்பு’ என்ற இந்த விளக்கம் இனி யாருக்கும் தெரியாமல் எஸ்சி எஸ்டி மக்களை அவமதிக்கலாம் என்ற ஊக்கத்தைச் சாதி வெறியர்களுக்கு ஏற்படுத்திவிடும். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் ஆன்மாவையே கேள்விக்குள்ளாக்குகிறது. அந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதாகவும் இருக்கிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்து ஏற்கனவே இப்படி எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசு உடனடியாக அதற்குச் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதுபோலவே இப்போதும் சட்டத்திருத்தம் கொண்டு வந்து உச்ச நீதிமன்றம் இழைத்திருக்கும் அநீதியைக் களையவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் .

இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி நாகேஸ்வரராவ் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடர்ந்து தீர்ப்புகளை வழங்கி வருகிறார். இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்று சொன்னதோடு இட ஒதுக்கீடு தொடர்பான எந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தாலும் அதை உடனடியாகத் தள்ளுபடி செய்தும் வருகிறார். இப்போது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக இந்தத் தீர்ப்பையும் அளித்துள்ளார்.

இத்தகைய போக்கு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கங்களையோ, எஸ்சி /எஸ்டி மக்கள் தொடர்பான வழக்குகளையோ நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்விற்கு அனுப்புவதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்