Aran Sei

`பாஜகவுக்குக் கார்ப்பரேட்கள்தான் முக்கியம்; நாங்கள் அல்ல’ – மீனவத் தலைவர் கொந்தளிப்பு

ல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

கடந்த 30 ஆண்டுகளாக, இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கைக் கடற்படைத் தாக்குதல் நடத்துவதும் கைது செய்வதும் மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இலங்கை கடலில் கிடக்கும் தமிழக மீனவர்களின் படகு

2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இலங்கைக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 150க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது. இதில் நல்லெண்ண அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டிருந்தது.

கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்

அந்தப் படகுகளை மீட்க தமிழகப் படகு மீட்புக் குழு இலங்கை சென்றுள்ளது. அங்கு நல்ல நிலைமையில் இருந்த 30 விசைப்படகுகளை மட்டுமே மீட்டெடுத்துள்ளது. மற்றவை அப்படியே விடப்பட்டுள்ளன. மேலும் இது கொரோனா காலம் என்பதால் இலங்கைக்குச்  சென்று, பழுதானதை மீட்க முடியாத சூழல் உள்ளது.

இதனால் மீதமுள்ள 121 தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தவிட்டுள்ளன. இலங்கை நீதிமன்றத்தின் இந்த  உத்தரவு தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு விசைப்படகின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய்.

இது தொடர்பாகப் பேசிய மீனவச் சங்கத் தலைவர் எமரெட்டிடம் அரண்செய் பேசிய போது, ”பாஜக ஆட்சிக்கு வந்த பின், இலங்கையிடமிருந்து ஒரு படகைக் கூட மீட்டுத்தர முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி முடிகையில், இலங்கையில் ஒரு படகு கூட இல்லை. அந்த ஆட்சிக் காலத்திலும் படகுகள் பிடிப்படும். ஆனால் அது உடனுக்குடன் பேச்சு வார்த்தை நடத்தி மீட்கப்படும். இந்த அரசாங்கம் எதையும் செய்யவில்லை.” என்று கண்டித்துள்ளார்.

`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

“அங்கே படகுகள் எல்லாம் பயனற்று, கடல் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. அதை உடைத்து, இங்கே கொண்டு வரச் செலவாகும். அதனால், அதை அங்கேயே வைத்து உடைத்து விற்று வரும் தொகையையும் படகிற்கான இழப்பீட்டுத் தொகையையும் தர வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், “இந்த அரசாங்கம் வந்த பின், மீனவத் தொழிலுக்கு ஒரு பாதுகாப்பு இல்லை. பாதிப்புகள் வந்தா இழப்பீடு கிடையாது. படகுகள் பிடிப்பட்டால், மீட்கப்படுவது கிடையாது. இலங்கையை நட்பு நாடு என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்களால், இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து படகை மீட்டுத்தர முடியவில்லை. மத்திய அரசுக்கு கார்ப்பரேட்டுகள்தான் முக்கியம். மீனவர்கள் இல்லை.” என்று கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படை அட்டூழியம்

படகுகள் கிடைக்காததால், எல்லோரும் கூலி வேலைகளுக்கு வெளியூர் செல்லத் தொடங்கி விட்டனர் என்றும், மத்திய அரசாங்கம் நீடித்தால் இங்கு மீனவர்களே இருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்