Aran Sei

பட்டாசுத்  தொழிற்சாலையில் தீ விபத்து – உயிர்ச்சேதம் தவிர்ப்பு

 
சிவகாசி அருகே சட்டத்துக்குப் புறம்பாக ஃபேன்ஸி ரக வெடிகள் தயாரித்த பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயிர்ச்சேதம் ஏதுமின்றி நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.  

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சய்பிரதீப் (32). இவர் அதே ஊரில் அரசு உரிமம் பெற்ற பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ஆலையில் சட்டத்துக்குப் புறம்பான வகையில், அனுமதிக்கப்படாத ஃபேன்ஸி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. உரிமம் பெற்ற ஆலையில் 20 பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற விதியையும் மீறி ஆலையிலும், அதனைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் தற்காலிகமாக கூடங்கள் அமைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.

ஆலையச் சுற்றி அமைக்கப்பட்ட தற்காலிக கூடங்களில்தான்  ஃபேன்ஸி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறது. 
இந்நிலையில், நேற்று காலை பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்து சிதறின. ஆலையிலும், சுற்றியுள்ள கூடங்களிலும் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் உடனடியாக அப்பகுதியிலிருந்து தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஆலை முழுவதும் பட்டாசுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்ததால், தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சம்பவ இடத்துக்கு சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார், பட்டாசு தனித் தாசில்தார் லோகநாதன், சிவகாசி தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விபத்தை பார்வையிட்டு விசாரித்தனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் சஞ்சய் பிரதீப், ஆலை போர்மேன் தலைமறைவான நிலையில் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்