Aran Sei

மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன – கௌசல்யா

Shankar-Kausalya

உடுமலை சங்கர் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையிட்ட மனுமீது, கௌசல்யாவின் தந்தை உட்பட பத்துபேர் பதிலளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்துள்ளது.

காதல் திருமணம் செய்த சங்கர் – கௌசல்யாவை, 2016 மார்ச் 13ஆம் தேதி உடுமலையில், கௌசல்யாவின் குடும்பத்தினர் கூலிப்படை வைத்து கொடூரமான முறையில் தாக்கியதில் சங்கர் உயிரிழந்தார். பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌசல்யா, சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்து, கணவர் சங்கரை கொன்றவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அலமேலு 2017ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த ஆண்டு ஜூன் 22ம் தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது, வழக்கின் முதன்மைக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை எல்லா குற்றங்களிலிருந்தும் விடுவித்து, மரண தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. சின்னசாமிக்கு கொலையில் தொடர்பு இருப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

மேலும் 5 குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்திருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, விடுதலையான சின்னசாமி, உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டால், தன்னுடைய தரப்பு வாதத்தைக் கேட்காமல் உச்சநீதி மன்றம் முடிவெடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கிலிருந்து சின்னசாமி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, கௌசல்யா, சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தமனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரி மற்றும் எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு வழக்கினை விசாரித்தது. அப்போது, இந்த வழக்கு கட்டாயம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டு உச்சநீதி மன்றம் வழக்கினை ஒத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து கௌசல்யாவிடம் பேசியபோது, “உச்ச நீதிமன்றம் மேலும் விசாரிக்கப்பட வேண்டும் என கூறியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. சங்கரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எவிடன்ஸ் கதிர் தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் வழக்கினை நடத்திச் செல்கிறார்கள்.” என்றார்.

மேலும் “ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சைபர் கிரைமில் புகாரளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என்றும் கௌசல்யா கூறினார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்