Aran Sei

‘பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வேண்டும்’ – எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்புத் தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றமும், அதனை தொடர்ந்து பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் பாபர் மசூதி அமைந்திருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

‘ பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டம் இல்லை ‘ : தீர்ப்பு முழு விபரம்

இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று (டிசம்பர் 6), திருச்சி மாவட்டம் பாலக்கரையில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) சார்பில், மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அயோத்தி: மசூதி கட்டும் நிர்வாகக்குழுவில் அரசைச் சேர்க்க கோரிக்கை – நிராகரித்த உச்ச நீதிமன்றம்

அப்போது, சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டதாகவும், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதேநேரம் பள்ளிவாசலைச் சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்ப்பையும் மத்திய அரசையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்