Aran Sei

மனுதர்மம் : திருமாவளவனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர்நீதி மன்றம்

னுதர்மம் பற்றித் தவறாகப் பேசி, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயற்சித்ததாக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை, தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இணையவழிக் கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் கலந்துகொண்டார்.

பெண்களுக்கு எதிரான மனுஸ்மிருதியைத் தடைசெய் – திருமாவளவன்

அதில் பேசும்போது, ”மனுதர்மத்தின்படி, எல்லாப் பெண்களுமே விபச்சாரிகள்தான். கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும் பொருந்தும். அடிநிலையில் உள்ள இதரப் பெண்களுக்கும் பொருந்தும்“ என்று பேசியிருந்தார்.

அதற்கு சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மற்றொருபுறம், திருமாவளவன் கூறியது உண்மைதான் என்றும், மனுதர்மத்தில் பெண்களை இழிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் பலர் திருமாவளவனின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து திருமாவளவன் பேசிய காணொலி யூடியூபிலிருந்து அகற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மனுஸ்மிருதியைத் தடைசெய்யக் கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்.

மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடை செய்- விசிக போராட்டம்

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், தனது சொந்த அரசியல் லாபத்திற்காக இந்துக்களை அவமதித்ததுடன், சமூகத்தில் அசாதாரணச் சூழ்நிலையை உருவாக்கி, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி, நாடாளுமன்ற செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மனுதர்மத்தை அம்பேத்கரும் கொளுத்தினார் – ஆனந்த் டெல்டும்டே

அந்த மனுவில், ”2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கமளிக்க, திருமாவளவன் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல. அவர் அளித்துள்ள விளக்கம் தவறானது” என்றும், இதுபோன்ற தேவையற்ற விளக்கங்களை அவர் அளித்திருக்கக் கூடாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சர்ச்சை பேச்சு காரணமாக அமைதியற்ற சூழல் உருவாகியுள்ள போதும், அவர் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசி வருகிறார் என்றும், இதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதாகக் கூறி அவர் எடுத்துக்கொண்ட, பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‘ மனு தர்மத்தில் பெண் விரோத, தலித் விரோத கருத்துக்கள் உள்ளன ‘ – ஆர்.எஸ்.எஸ்

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, “ பதவிப் பிரமாண உறுதி மொழியை மீறியதாகத் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற செயலாளருக்கு அக்டோபர் 27ல் மனு அளிக்கப்பட்டது. அதைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.” என்று மனுதாரர் தரப்பு கூறியுள்ளது.

”குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராகச் செயல்பட்டுப் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தியுள்ளார்.” என்று வாதிடப்பட்டுள்ளது.

`நாவை அடக்கிப் பேசுங்கள்’ – பாஜகவிற்கு ஆதித்தமிழர் பேரவை எச்சரிக்கை

மனுதாரரின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது.” என்று கண்டித்துள்ளனர்.

மனுஸ்மிரிதி சட்டப் புத்தகமும் இல்லை என்றும் மனுஸ்மிரிதி மொழி பெயர்ப்பு சரியா தவறா என்பது யாருக்கும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர். .

பெண் விரோத, தலித் விரோத கருத்துகள் – மனுதர்மத்தை எரித்த ஏபிவிபி

மேலும், எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது. ஆனால், இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று விரிவான மனுத் தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

இதை மனுதாரர் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளனர். இதையடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், உரிய அரசியல் சட்டப் பிரிவுகளைக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதித்துள்ளனர். மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்