Aran Sei

அண்ணாமலையைத் தொடர்ந்து கட்சி அரசியலில் இன்னொரு ஐஏஎஸ் அதிகாரி

கர்நாடகாவில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றிய  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் இணையுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபகாலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர்பதவியில் இருப்பவர்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் சமூக செயற்பாட்டிலும் அரசியலிலும் ஈடுபடுவது அதிகமாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக கட்சியில் இணைந்து தற்போது தமிழக துணைத் தலைவராக உள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியான சகாயமும் தனது பதவிக்காலம் முடியும் முன்பே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார். அவரும் அரசியலில் ஈடுபட உள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“எனது போராட்டத்தைத் தொடரும் விதமாகக் காங்கிரஸ் கட்சியில் நான் சேர உள்ளேன்.  நான் எங்கிருந்தாலும் எனது இறுதி மூச்சு வரை சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காகத் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்து வருவேன்” என்று ட்விட்டரில் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

 

“பன்முகம் கொண்ட இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள் வரலாறு காணாத வகையில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. வரக்கூடிய நாட்களில் இத்தாக்குதல் அதிகரித்து இந்தியாவின் பன்முகத்தன்மை கடும் சோதனைகளை சந்திக்கும் என்று கருதுகிறேன் ” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

“இன்று இந்தியா அதிகாரத்திலிருக்கும் ஜனநாயகவிரோத பன்முகத்தன்மைக்கு எதிரான சக்திகளால் பெரும் ஆபத்தை சந்தித்து வருகின்றது என்பதை உணரத் தொடங்கியுள்ளனர்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

” அரசியலமைப்பு சட்டத்தை நேசிப்போர் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு நேசம் மிகுந்த இந்தியாவை விட்டுச் செல்வதற்கு ஒன்றாக கரம் வேண்டியது காலத்தின் தேவை. நம் குழந்தைகளின் மனதில் வெறுப்பை விதைப்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.” என்றும் காந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இணைவது பற்றி குறிப்பிடுகையில், “அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள விழுமியங்களோடு நெருக்கமான ஒரு இயக்கமாக காங்கிரஸ் இயக்கத்தை பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைமை இன்று இந்தியா கருத்தியல் போரை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வேற்றுமையை வலியுறுத்தவில்லை. ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. வெறுப்பை நம்பவில்லை. அன்பையும் நேசத்தையும் நம்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

” பிரிவினைவாத சக்திகளுக்கு எப்போதும் தமிழகம் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இந்நிலையை நீடிக்க செய்து, தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் காலூன்றாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது எனது கடமை என்றே கருதுகிறேன். தமிழக மக்கள் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை விரும்புகிறார்கள் ஒழிய வீதிகளில் மதக்கலவரங்களில் ஈடுபடுவதை அவர்கள் விரும்பவில்லை. தமிழக மக்கள் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநிறுத்த எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் என்றே நான் நம்புகிறேன்.” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

தமிழக மக்களோடு அவர்களின் சேவையில் எனது இறுதி மூச்சு வரை தமிழகத்தின் அடிப்படை விழுமியங்களை காப்பதற்காக போராட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். மக்களுக்காக பணியாற்றுவதை நான் எப்போதும் விரும்பியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னரும் அதையே தொடர்ந்து செய்வேன்” என்று தனது அறிக்கையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்

41 வயதான சென்னையை சேர்ந்த சசிகாந்த் செந்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று, கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 9-ஆவது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்து ஐஏஎஸ்-யில் தேர்வாகி இருந்தார்.

கர்நாடகாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக துணை ஆட்சியர், ஆட்சியர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றி, மக்களின் நன்மதிப்பை பெற்றார். 2017 ஆம் ஆண்டு தட்சின கன்னட மாவட்டத்தில் பணியாற்றிய போது இரு சமூகக்களுக்கிடையே நிலவிவந்த தொடர் மோதலைத் தடுக்கும் விதமாகச் சமூக நல்லிணக்க பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பு மோதலை தடுத்து நிலைமையை சரிசெய்தார்.

2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் அந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்தபோது தனது ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டில் நடக்கும் பல சம்பவங்களை தன்னால் சகித்துக் கொண்டு பணியாற்ற முடியவில்லை எனக்கூறி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசை பொதுத் தளங்களில் விமர்சித்து வருகிறார். நாளை சென்னையிலுள்ள காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தினேஷ் குண்டு ராவ் முன்னிலையில் தன்னைக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்ள இருக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்