Aran Sei

சசிகலாவின் விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: எடப்பாடி பழனிசாமி

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சசிகலாவின் அபராதத் தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் ஜெயலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கி, நான்காண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ஒவ்வொருவருக்கும் பத்து கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா, சுதாகரன், இளவரசி கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

2021-ம் ஆண்டி பிப்ரவரியில் தண்டனைக் காலம் நிறைவடையும் நிலையில், சசிகலாவின் அபராதத் தொகை சிறைத்துறைக்கு செலுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுபடி, அபராத் தொகையை செலுத்த தாமதித்தால் சிறைத் தண்டனை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் அரண்செய்-க்கு அளித்துள்ள பேட்டியில், “நேற்று நீதிமன்றத்தில் பத்து கோடியே பத்து லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பல கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு தகுந்த பதிலளித்திருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

மேலும், சசிகலாவைக் கூடிய விரைவில் சிறையில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறையின் முன்னாள் டிஐஜி ரூபா, தண்டனைக் காலம் நிறைவடையும் முன்னர் சசிகலா விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியமே இல்லை என்று அரண்செய்-இடம் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

அதற்கான எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ரூபா குறிப்பிட்டிருந்தார்,

இதனிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, “சசிகலாவின் விடுதலை கட்சியிலும் ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.” என்றுக் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்