Aran Sei

திண்டுக்கல் கொடூரம் : “ஒரே குரல் நீதிதான்” – முடிதிருத்துவோர் நலச்சங்கம்

திண்டுக்கல் அருகே வடமதுரையில் 12 வயதுச் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுதும் உள்ள சலூன் கடைகள் கடை அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள G.குறும்பபட்டியைச் சேர்ந்தவர்கள் வெங்கடாசலம் – லட்சுமி தம்பதி. வெங்கடாசலம் முடி திருத்தும் தொழிலைச் செய்துவரும் நிலையில் மனைவி லட்சுமி கூலி வேலைக்குச் சென்றுவருகிறார். இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயதான மகள் உள்ளார்.

2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி, கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் 12 வயதுச் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் இருந்த கிருபானந்தன் (19) என்பவன் சிறுமியை வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளான். இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபானந்தனைக் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இக்கொலை தொடர்பாக 35 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த  நீதிபதி புருஷோத்தமன் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி மதியம் தீர்ப்பு வழங்கினார். அதில் கிருபானந்தம் குற்றவாளி என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்தார்.

குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்தில் சிறுமியின் தாய் உட்பட உறவினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது சிறுமியின் தாய் லட்சுமி அழுதபடியே மயங்கி விழுந்தார்.

நீதிமன்ற வளாகம் முன்பு மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் முறையாக விசாரணை செய்யாமல் குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகக் கூறி மாதர் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலச்சங்கம், செப்டம்பர் 9-ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் உள்ள முடித்திருத்தும் கடைகளை அடைத்துக் கடையடைப்புப் போராட்டம் செய்யவிருப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுதும் தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலச்சங்கத்தின் கீழ் உள்ள முடித்திருத்தும் கடைகள் கடையடைப்பு செய்தன. மேலும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில், தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலச்சங்கம் (தென் சென்னை மாவட்டம்) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.கே.ராஜாவிடம் அரண்செய் பேசிய போது, “தமிழ்நாடு முழுதும் உள்ள 5 லட்சம் சலூன் கடைகள் இன்று கடையடைப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டன. மொத்தம் 10 லட்சத்திற்கும் அதிகமான முடிதிருத்தும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களிலும், எங்கள் மாவட்ட நிர்வாகிகள், அந்தச் சிறுமியின் இறப்பிற்கு நீதி வழங்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

எங்கள் ஒட்டு மொத்தத் தொழிலாளர்களின் ஒரே குரல் `வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்க வேண்டும்’ என்பதுதான். அதற்குத் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். ” என்றார்.

இதுகுறித்து தமிழகச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, “சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதாக இன்று செய்தி வந்திருக்கிறது. அரசு உடனடியாக இந்த வழக்கை ஆராய்ந்து, மேல்முறையீடு செய்வதற்கான அத்தனை நடவடிக்கைகளிலும் இறங்கும்.” என்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்