Aran Sei

`விஜய் மௌனமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன’ – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

பாஜகவில் இணைவதாக வந்த செய்தி துளிகூட உண்மையில்லை என்றும் விஜய் மனதுக்குள் என்ன இருக்கிறது என்று தெரியாது என்றும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பத்தாண்டுகளுக்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வரநினைத்ததாகத் தெரிவித்தார்.

நீங்கள் பாஜகவில் இணையப் போவதாகத் தகவல் வந்தது என்று செய்தியாளர்கள் கேட்டபோது “சிரித்துக்கொண்டே… ஒரு துளி சின்னத் துளி கூட அதில் உண்மையில்லை” என்றார். விஜய் அரசியலுக்கு வர ரசிகர்கள் விருப்பப் படுவதாகக் கேட்டபோது “விஜய் மௌனமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் பெற்றவர்களுக்குக் கூடத் தெரியாது” என்று கூறினார்.

மேலும், ரஜினிகாந்த் இதோ வருகிறேன் இதோ வருகிறேன் என்று சொல்கிறார். ஆனால் இன்னும் வரவில்லை. அவரின் வருகை எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு “ஒருசிலர் அரசியலுக்கு வந்தா நல்லா இருக்கும் என்று நினைப்போம் அல்லவா? ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று பத்துவருடங்களுக்கு முன்பு நினைத்தேன். ஆனால், வரவில்லை. அதற்குப் பெயர் ஏமாற்றம்தானே.

தமிழர்கள் திராவிடப் பரம்பரையில் வந்தவர்கள். எனவே, திராவிடக் கட்சிகள் ரொம்ப வலிமையா இருக்கின்றன. இதை மீறி ஒரு கட்சி உருவாக வேண்டும் என்றால் `தமிழ்நாடு, தமிழர்கள்’ இதை மையப்படுத்தி வந்தால் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கு” என்று கூறினார்.

2019 ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நேர்காணலின்போது `நடிகர் திரு.விஜய் அரசியல் பிரவேசம் நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறாரோ’ என்று சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பியபோது ‘இப்போது தானே முடிவெடுக்கும் நிலைமைக்கு விஜய் வளர்ந்திருக்கிறார். நானே இப்போது அண்ணாந்துதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றும் என்னிடம் இருந்த சமூகக் கருத்துகள் விஜயிடம் சென்றிருப்பதாக உணர்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்