Aran Sei

தாயகம் திரும்பும் தமிழர்களை நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டாம் – ஜவாஹிருல்லா கடிதம்

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்கள் அனைவரும் அவசியம் கொரோனா பரிசோதனை முடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். வேலைகளை இழந்து தவித்து வருபவர்களுக்குக் கொரோனா பரிசோதனைக்கான செலவு பெரும் நெருக்கடியாக இருக்கிறது என்று அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

“வந்தேபாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பி வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை (Covid Negative test) எடுத்த பின்பே வரவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையின் மூலம், தங்களது வேலைகளை இழந்து வாழ்வாதாரமின்றித் தாயகம் திரும்பும் தமிழர்கள் மீது தமிழக அரசு பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று சாடியுள்ளார்.

“குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிந்த பல தமிழர்கள் தங்களது வேலையை இழந்து உணவுக்கும், தங்குமிடத்துக்கும் நண்பர்கள் அல்லது தன்னார்வலர்களை எதிர்நோக்கும் சூழலில் உள்ளனர். தமிழ்நாட்டுக்குத் திரும்புவதற்கான விமானக் கட்டணத்துக்குக் கூட வழியின்றித் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.8 ஆயிரம் வரை செலுத்த வேண்டியுள்ளது. வேலையை இழந்தவர்களுக்கு இத்தொகை பெரும் சுமையாக இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாத காரணத்தால் கடந்த அக்டோபர் 3-ம் தேதி மஸ்கட்டிலிருந்து திருச்சிக்குக் கிளம்பிய 10 தமிழர்களின் பயணத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது என்றும், இதுகுறித்து ஏர் இந்தியா அலுவலர்கள் திருச்சி வட்டாட்சியரிடம் தொடர்புகொண்டு அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டிய அவர் இத்தடை தமிழகப் பயணிகளுக்கு மட்டுமே உள்ளது என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படி ஒரு விதியைச் சுமத்தியிருப்பது வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கிறது. எனவே, தமிழகம் திரும்பும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்.” என்று ஜவாஹிருல்லா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்