Aran Sei

இராமேஸ்வரம் கோவில் நகை எடை குறைவு – குருக்களிடம் அபராதம் வசூலிக்கப்படுமா?

ராமேஸ்வரம் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகளில் எடை குறைந்துள்ளதால்,  நிர்வாகம் கோயில் குருக்களுக்கு விளக்கம் கேட்டும், இந்த தொகையை அவர்களிடமிருந்து ஏன் வசூலிக்கக் கூடாது என்று கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில்  சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 65 வகையான நகைகளின் எடை  குறைந்துள்ளதாக ஆய்வுக் குழு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எடை குறைவு குறித்து கோவிலில் பணியாற்றும் குருக்கள் மணியம் மற்றும் ஓய்வு பெற்ற குருக்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறைபாடு தொகையை அவர்களிடமிருந்து ஏன் வசூலிக்கக் கூடாது என்று விளக்கம் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இராமேஸ்வரம் கோவிலுக்கு சொந்தமான நகைகள் அனைத்தும் கோவிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா, ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் நவராத்திரி திருவிழா உள்ளிட்ட விழா நாட்களில் மட்டும் சுவாமி-அம்பாளுக்கு இந்த நகைகள் அணிவிக்கப்படும்.

இந்தநிலையில் ராமேஸ்வரம் கோவிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அனைத்து வகை நகைகளையும் சரிபார்த்து, நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் மறு மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. திருவிழா காலங்களில் சாமி, அம்பாள் வலம் வரும் தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட வாகனங்கள், தேர்களின் எடையும் சரிபார்க்கப்பட்டன.

இந்த ஆய்வின் போது, கோவிலில் சாமிக்கு அணிவிக்கப்படும் பல நகைகளின் எடை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. நகைகளில் எடை குறைவு குறித்து கோவிலில் பணியாற்றும் குருக்கள், மணியம் மற்றும் ஓய்வு பெற்ற குருக்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கோவில் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீசில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரையிலும் அபராதம் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளதால், பணியாற்றுபவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இராமநாதசுவாமி கோவில் இணை ஆணையர் சி.கல்யாணி பெயரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 2019-ம் ஆண்டு மறுமதிப்பீட்டின் படி, நகைகளில் உள்ள இழப்பீடுகள் குறித்து, பட்டியலிடப்பட்டுள்ளது.

1978-ஆம் ஆண்டு மறுமதிப்பீட்டு அறிக்கையின் படி, நகை வரிசை எண் 39-ல் உள்ள நகையின் மேல் பாகத்தில் உள்ள வெள்ளித் தகடு 100 கிராம் எடைக் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும், நகை வரிசை எண் 47-ல் உள்ள வெள்ளி நகையில் 13 கிராம் எடைக்குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நகை வரிசை எண் 157-ல் உள்ள வெள்ளி நகையில் 14 கிராம் எடைக்குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ”இந்த குறைபடும் வெள்ளி எடை 14 கிராமிற்கு கிராம் 1க்கு ரூ.40/- வீதம் இழப்பீடு தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரி வசூல் செய்ய உத்தரவு பிறப்பிக்கலாம்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இராமநாதசுவாமி கோவில் இணை ஆணையர் சி.கல்யாணியிடம் பேச அரண்செய் அழைத்தபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்