Aran Sei

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறாரா ராமதாஸ்?

மருத்துவ இட ஒதுக்கீடு தாமதிக்கப்படுவது அநீதி என்றும், தமிழக ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்வதில்லை என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேட்ட பின்னர் இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் அப்படியே மசோதா இருந்தது.

நேற்று முன்தினம் (அக்டோபர் 20), மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், ஆளுநரால் மசோதா ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கருத்து பகிர்ந்துள்ளார்.

”மருத்துவக்கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க இன்னும் 3 வாரங்கள் ஆகும் என ஆளுனர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மையென்றால் 3 வார அவகாசம் காலம் தாழ்த்தும் முயற்சியே.

7.5% இட ஒதுக்கீடு சட்டம் குறித்து அதிகபட்சமாக ஒரு நாளில் சட்ட ஆலோசனை பெற்று முடிவெடுக்க முடியும். ஆனால், முதன்முதலில் இதற்கான பரிந்துரை ஜூன் 15-ஆம் தேதி ஆளுனருக்கு அனுப்பப்பட்டு 4 மாதங்கள் ஆகும் நிலையில் இன்னும் ஆலோசனை நடத்துவதாக கூறுவதை நம்ப முடியவில்லை.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகி விடக் கூடாது என்ற எண்ணமும், எங்கிருந்தோ அளிக்கப்படும் அழுத்தமும்தான் இந்தத் தாமதத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாள் தாமதமும் பெரும் அநீதியை விளைவிக்கும்.

நவம்பர் இறுதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று  MCI  உத்தரவிட்டால்,  மாணவர் சேர்க்கையை விரைந்து தொடங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் எழும் அல்லது எழுப்ப வைக்கப்படும். அப்படி ஒரு நிலை ஏற்படுத்தப்படுவதைத்தான் அதிகார மையங்கள் விரும்புகின்றனவோ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக, “அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படக்கூடும் என்று நினைப்பதே பெரும் பாவம். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுனர் மாளிகை உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதைக் கண்டுகொள்வதில்லை….. செய்யவும் மறுக்கிறார்கள்!” என்று ஆட்சியில் இருக்கும், பாமக-வின் கூட்டணி கட்சியான அதிமுக-வைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ராமதாஸின் இந்த நகர்வு குறித்து பத்திரிகையாளர் எம்.சி.ராஜனிடம் அரண்செய் பேசிய போது, “பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருப்பதனால், ஆட்சிக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி மனநிலை இருக்கும். அதில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு எதிராகவும் ஆளுநருக்கு எதிராகவும் கருத்துகள் சொல்கிறார்.

இன்று சொல்லியது மிக வலுவான ஒன்று. ஆந்திராவில் ஜெகன்மோகன் சொல்லுவதை விட அதிகமாகச் செய்கிறார். இங்கு சொல்வதையும் செய்வதில்லை என்கிறார். இதில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை விட, கூட்டணியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை முன் கூட்டியே அடுக்குகிறார் என்று சொல்லலாம்.” என்றார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்