Aran Sei

உடல்நலப் பிரச்சனையால் கட்சி தொடங்குவது தடைபடுகிறதா? : ரஜினிகாந்த்

டிகர் ரஜினிகாந்த் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருந்தது. அந்தக் கடிதம், தான் எழுதியது இல்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் எழுதியதாக விகடன் இணையதளத்தில் வெளியான கடிதத்தில், புதிய கட்சி தொடங்குவதற்கான தனது முயற்சிகளைக் கொரோனா பிரச்சனையால் இந்த ஆண்டு செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டு விட்டு

“2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர்பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்குச் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரிலுள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.” என்று ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றிக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மருத்துவர்களின் ஆலோசனையைப் பொறுத்தவரையில்

“கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில், எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள்,

“கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும், அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்து பிறகுதான் தெரியவரும்.

இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம்.

அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாகப் பாதிக்கும். ஆகையால், இந்தக் கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தன்னுடைய உயிர் பற்றி கவலை இல்லை என்றும், ஆனால், உடல்நிலையை பராமரித்துக்கொண்டே புதிய கட்சிக்கான வேலைகளைச் சரிவர செய்ய முடியாமல் போய் விடும் என்பதால் புதிய கட்சி ஆரம்பிப்பது பற்றி மறுபரிசீலனை செய்யப் போவதாகவும், அது குறித்து நலன் விரும்பிகளின் மற்றும் ஆதரவாளர்களின் கருத்துக்களை பெற்று இறுதி முடிவு எடுக்கப் போவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரஜினிகாந்த் அந்தக் கடிதத்தில் தனது உடல்நிலை பற்றியும், மருத்துவர்களின் ஆலோசனை பற்றியும் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் உறுதிப்படுத்தியும், கட்சி தொடங்குவது பற்றிய கருத்துக்களை மறுத்தும் வெளியிட்டுள்ள செய்தி ரஜினி ஆதரவாளர்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்